சென்னை: பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குணமடைய வேண்டும் என மதுரை மீனாட்சியை வேண்டிக்கொள்கிறேன் என்று நடிகர் சூரி கூறினார்.
பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கரோனா தொற்று காரணமாக சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், அவர் மீண்டும் உடல் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று திரைத்துறை சார்ந்த பிரபலங்கள் தங்களது பிரார்த்தனைகளைச் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிர்ந்துவருகின்றனர்.
அறிக்கை, காணொலி போன்று பல்வேறு வகைகளில் வெளியிட்டுவருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூரி செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
விவரம் தெரிஞ்சு ஒருநாள்கூட உங்கள் குரலைக் கேட்காமல் கடந்தது இல்லை. விடியற்காலை ஆனாலும் சரி, விசேஷங்கள் ஆனாலும் சரி தாலாட்டி எங்களைத் தூங்கவைப்பதும், தன்னம்பிக்கையால் தட்டிக்கொடுத்து ஓடவைப்பதும் என எப்பவும் உங்கள் பாட்டுதான்.
எப்போதும்போல சிரிச்ச முகத்தோடு நீங்கள் எங்களுக்காகப் பாட வேண்டும். உங்கள் குரலைக் கேட்டுக்கொண்டே, நாங்கள் எங்களின் வாழ்க்கையைக் கடக்கணும் என்று ஆத்தா மதுரை மீனாட்சியை வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மீண்டு வா தம்பி எஸ்.பி.பி. - நடிகர் சிவகுமார் உருக்கம்!