திருவனந்தபுரம்: மலப்புரத்தில் அன்னாசி பழம் கொடுத்து யானை கொல்லப்பட்டதாக வெளியான செய்தியின் உண்மைத்தன்மை குறித்து மலையாள நடிகர் பிரித்விராஜ் ட்விட்டரில் தகவல் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக நடிகர் பிரித்விராஜ் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள தகவலின் விவரம் பின்வருமாறு:
கர்ப்பமான யானக்கு யாரும் உள்நோக்கத்துடன் அன்னாசி பழத்தில் வெடி வைத்துக் கொடுக்கவில்லை. பயிர்களை மேயும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த கன்னிவெடியை எதிர்பாராத விதமாக யானை உட்கொண்டது. இது சட்டவிரோதமானது என்றாலும், இந்த முறை பல்வேறு பகுதிகளில் பயிர்களை மேயும் வனவிலங்களிடமிருந்து தற்காத்துக்கொள்வதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் பாலக்காடு மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. மலப்பபுரம் பகுதியில் நடக்கவில்லை. இதில் எந்தவிதமான இனவாத இணைப்பும் இல்லை. இது தொடர்பாக வனத்துறை, போலீஸார் என இருதரப்பினரும் வழக்குப் பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் பற்றி கேள்விப்பட்டதுடன் உடனடியாக யானையை மீட்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டபோதிலும், அனைத்தும் வீணானது.
மே 27ஆம் தேதியே அந்த யானை இறந்தவிட்டது. ஆனால் செய்திகளில் குறிப்பிடுவதுபோல் ஜூன் 3ஆம் தேதியன்று நிகழவில்லை, என்று பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து, பிரித்விராஜின் இந்த ட்வீட்டை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்போதுவரை ரீட்வீட் செய்துள்ளனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்துக்கு எதிராக பலரும் தங்களது கண்டனக் குரல்களை வெளிப்படுத்தி வருவதுடன், விலங்குகளை காக்க வலியுறுத்தியும் கருத்துகளைத் தெரிவித்தும் வருகின்றனர்.