தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகித்து வந்த விஷால் தலைமையிலான அணி சங்க கணக்கு வழக்குகளில் முறைகேடு செய்ததாக தயாரிப்பாளர்கள் சங்கம் புகார் தெரிவித்தது. இந்நிலையில், இதனை ஆராய்ந்த பதிவுத் துறை, தயாரிப்பாளர் சங்கம் அளித்த விளக்கத்தில் திருப்தி இல்லாததால், சங்கத்தை நிர்வகிக்க தனி அலுவலராக சென்னை மாவட்ட பதிவுத்துறை அலுவலர் சேகரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
தனி அலுவலர் நியமனத்தை எதிர்த்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலும், ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித் தனியாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தபோது, விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தயாரிப்பாளர் சங்கம் தொடர்பாக, பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த அனைத்து வழக்குகளையும் ஒன்றாக பட்டியலிட்டு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பிறகு இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரப்பட்டது.
இதனையடுத்து, தயாரிப்பாளர் சங்கம் தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் வேறு நீதிபதி முன் பட்டியலிடும்படி தலைமை நீதிபதிக்கு பரிந்துரைப்பதாக நீதிபதி ஆதிகேசவலு உத்தரவிட்டுள்ளார்.