இயக்குநர் ஹலிதா சமீம் நடிகர் சமுத்திரக்கனியை வைத்து சில்லுக்கருப்பட்டி என்னும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சுனைனா நடித்துள்ளார். இப்படம் நகர பின்னணி கொண்ட நான்கு குறுங்கதைகளைக் கூறும் அந்தாலஜி வகை திரைப்படமாகும். மேலும் இப்படத்தில் லீலா சாம்சன், சாரா அர்ஜீன், மணிகண்டன், நிவேதிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
டிவைன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெங்கடேஷ் வேலினி தயாரித்துள்ளார். 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கமர்ஷியல் படங்களை மட்டும் தயாரிப்பதோடல்லாமல், நல்ல திரைப்படங்களையும் வாங்கி வெளியிட்டுவருகிறது. அந்தவகையில், தற்போது இந்தப் படத்தின் உரிமையை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் வாங்கியுள்ளது.
இது குறித்து ஹலிதா சமீம் கூறுகையில், நான் மிகப்பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறேன். 'சில்லுக்கருப்பட்டி' படத்தினை பார்த்து முடித்த பிறகு சூர்யா - ஜோதிகா இருவரும் மனதார எங்களது குழுவைப் பாரட்டினார்கள். அதுமட்டுமல்லாது இப்படத்தின் உரிமையை வாங்குவதாகவும் அறிவித்தார்கள். இதைவிட மகிழ்ச்சி தரும் விசயம் எங்களுக்கு ஏதுமில்லை என்றார்.