இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் திரைப்படம், ‘அண்ணாத்த’. இதில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், மீனா உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர்.
'அண்ணாத்த' படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்றுவந்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாகப் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் ரஜினிகாந்த் தனது அரசியல் வருகை குறித்து சமீபத்தில் அறிவித்தார். மேலும் தான் நடித்துவரும், 'அண்ணாத்த' திரைப்படத்தின் படப்பிடிப்பு 40 விழுக்காடு மீதம் உள்ளதாகவும், அதை முடித்த பிறகு கட்சி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் 'அண்ணாத்த' படத்தின் 40 விழுக்காடு படப்பிடிப்பை முடிப்பதற்காக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டிக்கு தனி விமானம் மூலம் சென்றுள்ளார். அவரைப்போல் லேடி சூப்பர் நயன்தாராவும் தனி விமானம் மூலம் சென்று படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். அங்கு நடிகர் ரஜினிகாந்த் 20 முதல், 25 நாள்கள் வரை படப்பிடிப்பு நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.