மும்பை: ரன்வீர் சிங் மிகவும் அற்புதமான நடிகர். அவருக்காகக் கூடிய ரசிகர்கள் கூட்டத்தைப் பார்த்து மெய்சிலிர்த்துப் போனேன் என்று கூறியுள்ளார் 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் ப்ரீத்தியாக அனைவரையும் கவர்ந்த நடிகை ஷாலினி பாண்டே.
இந்தியில் உருவாகி வரும் 'ஜெயேஷ்பாய் ஜோர்தார்' என்ற படத்தில் ரன்வீர் சிங் ஜோடியாக நடித்துவருகிறார் ஷாலினி பாண்டே. இந்தப் படம் மூலம் பாலிவுட் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகும் இவர், தற்போது குஜராத் மாநிலத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்றுவருகிறார்.
இதையடுத்து தனது ஷூட்டிங் அனுபவம் குறித்து ஷாலினி பாண்டே கூறியதாவது:
குஜராத்தை மையப்படுத்தி 'ஜெயேஷ்பாய் ஜோர்தார்' படத்தின் கதை அமைந்துள்ளது. அந்த மாநிலத்தில் நான் இதுவரை செல்லாத பல இடங்களில் ஷூட்டிங் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கட்டுக்கடங்காத வகையில் படத்தின் ஷூட்டிங்கை பார்க்க ரசிகர்கள் நாள்தோறும் குவிகிறார்கள். குறிப்பாக ரன்வீர் சிங்குக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் ஆதரவைப் பார்த்து ஆச்சரியமடைந்தேன்.
ரன்வீர் மீது ரசிகர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தியதை ஆர்வத்துடன் பார்த்து ரசித்தேன். படப்பிடிப்பு நடைபெறும் ஒவ்வொரு பகுதியிலும் அவரது பெயரை உச்சரித்தனர். அவர் ஒரு அற்புதமான நடிகர். இவ்வளவு பெரிய நடிகராக இருந்தும் படக்குழுவினருடன் மிகவும் பிணைப்புடன் உள்ளார்.
இந்தத் தருணங்கள் ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் ஷுட்டிங்கில் செயல்படுத்தியது. 'ஜெயேஷ்பாய் ஜோர்தார்' படத்தில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளேன். ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் என நம்புகிறேன்.
'அர்ஜுன் ரெட்டி' பட ஹீரோயின் என என்னையும் ரசிகர்கள் கொண்டாடினர். அந்தப் படத்தில் எனது கதாபாத்திரத்தின் பெயரான ப்ரீத்தி எனச் சத்தமாகக் கூறி ஆராவாரமிட்டனர். ரசிகர்களால் மிகவும் நேசிக்கப்பட்ட 'அர்ஜுன் ரெட்டி' நாடு முழுவதும் மக்களிடையே ஒருவித இணைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 'அர்ஜுன் ரெட்டி' படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஷாலினி பாண்டே, தமிழிலும் நடிகையர் திலகம், கொரில்லா, 100% காதல் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதைத்தொடர்ந்து தற்போது ரன்வீர் சிங் ஜோடியாக பாலிவுட்டில் கதாநாயகியாக கால் பதிக்கிறார்.