இயக்குநர் திரு மக்கர்ஸ் இயக்கத்தில், ஒம்மஜி ஸ்டூடியோ சார்பில் கே.வி. டில்லோன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'ஷூட்டர்'. இப்படம் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருந்தது. இதில் வன்முறை, கொடூரமான குற்றங்கள், அச்சுறுத்தல், குற்றவியல் மிரட்டல்கள் உள்ளிட்ட காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
இந்நிலையில் இப்படத்தை பஞ்சாபில் திரையிட, அம்மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் தடை விதித்துள்ளார். இது குறித்து தயாரிப்பாளர் மீதும் இயக்குநர் மீதும் நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அமரீந்தர் சிங் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறுகையில், 'பஞ்சாப்பின் அமைதி, நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எந்தொரு செயலையும் அரசு அனுமதிக்காது. இந்நிலையில், ஷூட்டர் படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும் போது அதில் வன்முறை, குற்றவியல் மிரட்டல்கள் உள்ளிட்ட காட்சிகள் அதிகமாக உள்ளன. இது குற்றங்களை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது. இதனால், இளைய தலைமுறையினர் வழி தவறிச் செல்வர். எனவே, இப்படத்தை பஞ்சாபில் வெளியிடத் தடை செய்கிறோம்' என்றார்.
ஏற்கெனவே பஞ்சாப் - ஹரியானா நீதிமன்றங்கள், பஞ்சாப், ஹரியானா, சண்டிகாரில் மேடை நிகழ்ச்சிகளில் வன்முறையை தூண்டும் விதமான பாடல்கள், மதுபானங்கள் போன்றவற்றிற்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.