மும்பை: தீபிகா படுகோனே நடித்துள்ள 'சப்பாக்' படத்தின் ரிலீஸை தடைசெய்யக்கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திராவக வீச்சால் பாதிப்புக்குள்ளான லட்சுமி அகர்வாலின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ள படம் 'சப்பாக்'. இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. படம் நாளை திரைக்கு வரவுள்ள நிலையில், ரசிகர்கள் மட்டுமின்றி, திரை பிரபலங்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து இந்தப் படத்தின் ரிலீஸை தடைசெய்யக்கோரி திராவக வீச்சால் பாதிப்படைந்த லட்சுமி அகர்வால் தரப்பு வழக்கறிஞர் அபர்ணா பட் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
இதில், 'லட்சுமி அகர்வால் திராவக வீச்சு வழக்கில் பல ஆண்டுகளாக அவருக்கு வழக்கறிஞராக வாதாடியுள்ளேன். ஆனால் படத்தில் எனக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படாமல் உள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாகவே, இதுபற்றி தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார் அபர்ணா பட். இதையடுத்து தற்போது அவருக்கு ஆதரவாகப் பலர் கருத்து தெரிவித்துவருகின்றனர். இதனால் சற்று ஆறுதல் அடைந்துள்ள அவர், தனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் 'சப்பாக்' பட புரோமோஷன் நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்த தீபிகா, அங்குள்ள ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும்விதமாக மாணவர்களுடன் இணைந்து போராட்டத்தில் பங்கேற்றார். இதைத்தொடர்ந்து தீபிகாவுக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் குவிந்தன.
'சப்பாக்' படத்தை விளம்பரப்படுத்தும்விதமாக மாணவர்கள் போராட்டத்தில் தீபிகா பங்கேற்றுள்ளார் எனவும், மாணவர்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து தீபிகா தைரியமாகக் குரல் கொடுத்திருப்பதாகவும் பலர் கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து தீபிகாவுக்கு எதிராகப் பேசியவர்கள் 'சப்பாக்' படத்தை பார்க்க வேண்டாம் என்று #boycottchhapaak என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கினர். இதற்கு எதிராகத் திராவக வன்முறை குறித்த தீபிகாவின் 'சப்பாக்' படத்தை கண்டிப்பாகப் பார்ப்போம் எனவும் கருத்துகள் குவிந்தன.