பாடகி கனிகா கபூர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளது அவர் மேற்கொண்ட நான்காவது பரிசோதனை முடிவிலும் தெரியவந்துள்ளது.
பாலிவுட் பாடகி கனிகா கபூர் மார்ச் 9ஆம் தேதி லண்டனில் இருந்து மும்பைக்கு திரும்பினார். அதன் பின் லக்னோவில் நடைப்பெற்ற இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்துகொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் அரசியல் பிரபலங்கள், சினிமா நடிகர்கள், நடிகைகள் என 100க்கும் மேற்பட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர். கனிகா தான் லண்டனில் இருந்து வந்ததையும், தனக்கு கரோனா தொற்று சோதனை நடத்தப்பட்டதா என்பது குறித்தும் யாரிடமும் தெரியப்படுத்தவில்லை என கூறப்படுகிறது.
தான் வெளிநாடு சென்று வந்ததை யாரிடமும் சொல்லாமல் மறைத்த கனிகா கபூரை சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் பலரும் திட்டித் தீர்த்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யவேண்டும் எனவும் பலர் கோரிக்கை விடுத்தனர்.
கரோனா பெருந்தொற்றை வைத்துக்கொண்டு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாக கனிகா கபூர் மீது உத்தரப் பிரதேசத்திலுள்ள இரண்டு காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமில்லாது #KanikaKaCoronaCrime ஹேஸ்டேக்கையும் ட்விட்டரில் ட்ரென்ட் செய்தனர்.
இதனையடுத்து கனிகா தனது இன்ஸடாகிராம் பக்கத்தில், கடந்த நான்கு நாள்களாக எனக்கு காய்ச்சல் இருந்தது. இதையடுத்து நான் பரிசோதனை மேற்கொண்டபோது எனக்கு கோவிட்-19 தொற்று இருப்பது தெரியவந்தது. தற்போது நானும் எனது குடும்பத்தினரும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். மேலும் மருத்துவ ஆலோசனைகளையும் பெற்றுவருகிறோம் என்று பதிவிட்டார்.
கனிகாவின் இந்த பொறுப்பற்ற செயலுக்கு லக்னோவில் உள்ள மருத்துவமனையும் கனிகாவை கடுமையாக விமர்சித்திருந்தது.
இதற்கிடையில் கனிகா கபூருக்கு கரோனா தொற்று குறித்து நான்காவது முறையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிலும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கனிகாவின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறுகையில், கனிகாவின் பரிசோதனை முடிவு எங்களுக்கு கவலையளிக்கிறது. அவர் மேற்கொள்ளும் சிகிச்சை பலனளிக்கும் என்று தெரிகிறது. தேசிய ஊரடங்கு உத்தரவால் அவரை மேல்சிகிச்சைக்கு கூட விமானத்தில் கொண்டு செல்ல முடியாமல் இருக்கிறேம். கனிகா குணமடைய நாங்கள் கடவுளிடம் பிராத்திக்க மட்டுமே இப்போது முடியும் என்றார்.