இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் தோனியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். 34 வயதான இவர், இன்று மும்பை பாந்தராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இவரது திடீர் மரணம் பாலிவுட் வட்டாரங்கள் மட்டுமின்றி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. காவல் துறையின் முதல்கட்ட விசாரணையில் மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவந்துள்ளது. இவரது மறைவிற்கு இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
சச்சின் டெண்டுல்கர்:
சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைந்த செய்தியைக் கேட்டதும் எனக்கு மிகவும் அதிர்ச்சியாகவும் சோகமாகவும் இருந்தது. இளம் வயதிலேயே மிகவும் திறமையான நடிகராக இருந்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கிறேன்.
சேவாக்:
மிக எளிதில் மறையக் கூடிய இந்த வாழ்க்கையில் ஒருவர் என்ன மாதிரியான நிலைகளில் இருக்கிறார் என்பது நமக்குத் தெரியாது.
யுவராஜ் சிங்:
இளம் வயதிலேயே வெற்றிகரமாக இருந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைந்ததை என்னால் நம்ப முடியவில்லை. ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் எவ்வளவு துயரங்கள் வழியாகப் பயணிக்கிறார் என்பது நாம் வெளியிலிருந்து பார்த்தால் தெரியாது.
சுரேஷ் ரெய்னா:
சுஷாந் சிங் ராஜ்புத் மறைந்த செய்தி கேட்டதும் அதிர்ச்சியாக இருந்தது. தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திற்காக பலமுறை நான் அவரைச் சந்தித்துள்ளேன். அழகான, எப்போதும் புன்னகை கொண்ட நடிகரை நாம் இழந்துவிட்டோம்.
விராட் கோலி:
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணச் செய்தியைக் கேட்டதும் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அவர் மரணத்தை ஏற்றுக் கொள்வது மிகவும் கடினமாக இருக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அவரின் பிரிவிலிருந்து மீள்வதற்கான மன உறுதியளிக்க கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.
சிஎஸ்கே:
நாம் எதிர்பார்க்காத முடிவை சுஷாந்த் சிங் ராஜ்புத் எடுத்துவிட்டார். இன்னும் இந்தத் துக்கத்திலிருந்து மீளவில்லை. அவரது இழப்பு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
.