டெல்லி: கடந்த 2017ஆம் ஆண்டு அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில், அதிதி பாலன் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அருவி. திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே, அதன் போஸ்டர்கள் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு முக்கியத்துவமான, மாற்றத்தை அளிக்கும் திரைப்படமாக இருக்கும் என பலரும் நம்பிக்கைத் தெரிவித்தனர்.
அந்த நம்பிக்கையை பொய்யாக்காமல், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் வாழ்க்கையையும், சமூகம் அவர்களை எதிர்கொள்ளும் முறையையும் மிகவும் அழுத்தமாக பதிவு செய்தது. இந்தத் திரைப்படம் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் இந்த திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. மேலும், படத்தை ஸ்கேம் 1992 சீரிஸை தயாரித்த அப்லாஸ் என்டெர்டண்ய்ன்மென்ட் நிறுவனம் ஃபெய்த் பிலிம் நிறுவனத்துடன் இணைந்து இந்தத் திரைப்படத்தை தயாரிப்பது உறுதியாகியுள்ளது. ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் இந்தத் திரைப்படத்தை ஈ.நிவாஸ் இயக்கவுள்ளதாகவும், பாத்திமா சனா ஷேக் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாத்திமா சனா ஷேக், "அதிதி பாலன் அந்தத் திரைப்படத்தில் மிகத் துணிச்சலான பெண்ணாக நடித்திருப்பார். இதுபோன்ற திரைப்படத்தில் நடிக்க இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது. இந்தத் திரைப்படத்தில் கதாப்பாத்திரத்தில் ஒன்றிப்போக என்னால் இயன்ற அளவு நடிப்புத்திறனை வெளிப்படுத்துவேன்" எனக் கூறியுள்ளார்.
படத்தின் இயக்குநர் நிவாஸ் கூறுகையில், "இது ஹீரோக்களை மட்டும் சம்பந்தப்படுத்திய கதை அல்ல. இது வாழ்க்கையின் மீது கட்டவிழ்த்துவிடப்படும் பிம்பங்களை உடைக்கும் வகையிலான திரைப்படம். நான் கண்ட மிக முக்கியமான கதாப்பாத்திரத்தை இயக்குவதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்" எனத் தெரிவித்தார். இந்தத் திரைப்படம் நடப்பாண்டில் மத்தியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.