இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கியுள்ள 'பிரம்மாஸ்திரா' திரைப்படம் 2020ஆம் ஆண்டு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மிக பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தில் அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், அலியா பட், மெளனி ராய், நாகர்ஜூனா ஆகியோர் நடிக்கின்றனர். மிகப்பெரிய பொருள் செலவில் உருவாகும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் படத்தின் இயக்குநர் அயன் முகர்ஜி இப்படம் குறித்தும் கதை உருவான விதம் குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.
அயன் முகர்ஜி கூறுகையில், 'பிரம்மாஸ்திரா' எனது கனவுப்படம், இது 2011இல் உருவானது. 2013இல் Yeh Jawaani Hai Deewani படம் முடித்தவுடன் இப்படத்திற்கான கதை-திரைக்கதையை உருவாக்கத் தொடங்கினேன். கதை, திரைக்கதை, கதாப்பாத்திரப் படைப்பு, இசை மட்டுமல்லாமல் விஎஃப்எக்ஸ் துறையிலும் நம்மை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப் போகும் பிரமித்து பார்க்க கூடிய முயற்சி இருக்கும். இப்படத்தின் லோகோவை 2019 கும்பமேளாவில் பிரம்மாண்டமாக ஆகாயத்தில் வெளியிட்டோம். அப்போதுகூட இப்படத்தை 2019 கிறிஸ்துமஸ் அன்று வெளியிட முடியுமென உற்சாகமாக இருந்தோம்.
![பிரம்மாஸ்திரா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3127978_ayan.jpg)
ஆனால், கடந்த ஒரு வார காலமாக எங்கள் படத்தின் விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பக் குழுவினர் இப்படத்தை நினைத்த அளவுக்கு பிரம்மாண்டமாக கொண்டு வர சற்று அதிக காலம் தேவை என கருத ஆரம்பித்தனர். இதை மனதில் கொண்டு 'பிரம்மாஸ்திரம்' திரை வெளியீட்டை 2019 கிறிஸ்துமஸ் லிருந்து 2020 கோடை விடுமுறை காலத்திற்கு தள்ளிவைக்க முடிவெடுத்துள்ளோம். இந்த கால தாமதமானது இக்கனவு திரைப்படத்தை சிறப்பாக முடிப்பதற்கும், படத்தை திரைக்காவியமாக உருவாக்குவதற்கும் ஏதுவாக இருக்கும் என்பதில் உறுதியாய் இருக்கிறோம்' என தெரிவித்தார்.