மும்பை, பாந்த்ரா பகுதியில் நடிகர் டைகர் ஷெராஃப்பும் அவரது தோழியும் நடிகையுமான திஷா பதானியும் உடற்பயிற்சிக் கூடம் சென்று விட்டு வீட்டிற்கு செல்லாமால் காரில் சுற்றியதாகவும், இதைப் பார்த்த காவல் துறையினர், அவர்களை நிறுத்தி அத்தியாவசியத் தேவையின்றி வெளியல் வந்தாகக் கூறி வழக்குப் பதிவு செய்தாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து மும்பை காவல் துறையினர் இவர்கள் இருவரது பெயர்களைக் குறிப்பிடமால் பாலிவுட் பிரபலங்கள் கோவிட்-19 விதிமுறைகளை மீறியதாகவும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் தங்களது சமூக வலைதளப்பக்கத்தில் சூசகமாகத் தெரிவித்தனர். இதனையடுத்து பலரும் இதுகுறித்து தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
தற்போது இதற்கு பதிலளிக்கும் விதமாக டைகர் ஷெராஃபின் தாயார் ஆயிஷா கூறுகையில், "உண்மையை சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்கள் உடற்பயிற்சி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் இருவரின் ஆதார் கார்டை காவல் துறையினர் சோதனை செய்தனர். அவ்வளவுதான். இது போன்ற நேரத்தில் யாரும் தேவையின்றி வெளியே சுற்றுவது இல்லை. ஆகவே இதுபோன்ற விஷயங்களை பேசும்போது அதன் உண்மைத் தன்மையை சோதித்துக் கொள்ளுங்கள். எதுவும் தெரியாமல் நீங்களாகவே தீர்மானிக்காதீர்கள்" என்று கூறியுள்ளார்.