டெல்லி: இந்திய சாலைகளில் அக்டோபர் மாதத்தில் பயணிக்கத் தயாராகும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மாடல்கள் குறித்த விவரங்களை நிறுவனம் தங்களின் இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் தொடங்கிய ஸ்கூட்டர் முன்பதிவிற்கு, வாடிக்கையாளர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு தங்களின் இருப்பை பதிவுசெய்திருந்தனர். இதற்காக முன்பதிவு கட்டணமாக ரூ.499 வசூலிக்கப்பட்டது.
தற்போது, 10 நிறங்களில் வெளிவரும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் எஸ் 1, எஸ் 1 ப்ரோ ஆகிய மாடல்களில், வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்ப தெரிவுசெய்து, ரூ.499 செலுத்தி வாகனத்தைப் பதிவுசெய்யும் முறையை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இச்சூழலில், வாகனத்தை எவ்வாறு பதிவுசெய்யலாம், வங்கிக் கடன்கள், சலுகைகள் என்ன, வாரண்டி - கேரண்டி, அரசு மானியம் எவ்வளவு என்பது குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
எவ்வாறு பதிவுசெய்வது?
இந்த ஆண்டு ஜூலை மாதம் 499 ரூபாய் செலுத்தி, ஓலாவின் அதிகாரப்பூர்வ தளத்தில் ஸ்கூட்டரை முன்பதிவு செய்த அனைவரும், இன்று (செப். 8) முதல் மாடல், நிறம் ஆகியவற்றைத் தெரிவுசெய்து, தங்களின் பதிவை உறுதி செய்துகொள்ளலாம்.
பதிவுக்கட்டணம் இல்லாமல் எஸ் 1 மாடலுக்கு ரூ.20,000, எஸ் 1 ப்ரோ மாடலுக்கு ரூ.25,000 முன்பணமாகச் செலுத்த வேண்டும். மீதித் தொகையை ஸ்கூட்டர் டெலிவரி செய்யும் நேரத்தில் வாடிக்கையாளர் செலுத்தி, தங்களின் வாகனத்தைப் பெற வேண்டும்.
விற்பனை நிலையங்களின்றி அனைத்துச் செயல்பாடுகளையும் டிஜிட்டல் முறையில் ஓலா நிறுவனம் செய்துவருகிறது.
விலை நிலவரம் என்ன?
ஒவ்வொரு மாநில அரசும் அளிக்கும் மானியங்களைப் பொறுத்து விலை மாறுபடும். நாட்டில் மின்சார வாகனங்களின் உற்பத்தி, பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக மின்சார வாகனங்களின் விரைவான பயன்பாடு, உற்பத்தி- II (FAME-II) கொள்கையின்கீழ் மத்திய அரசு வழங்கும் மானியமும் இதற்குப் பொருந்தும்.
தலைநகர் டெல்லியில் ஓலா எஸ் 1 ஸ்கூட்டரின் விலை ரூ.85,099 ஆகவும், எஸ் 1 ப்ரோ விலை ரூ.1,10,149 ஆகவும் உள்ளது. இந்த விலையானது மாநில, மத்திய அரசுகளின் மானியங்கள் கழிக்கப்பட்டு கணக்கிடப்பட்டதாகும்.
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில்தான் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை மலிவானதாக உள்ளது. அங்கு எஸ் 1 மாடலின் விலை ரூ. 79,999 ஆகவும், எஸ் 1 ப்ரோ மாடல் விலை ரூ. 109,999 ஆகவும் உள்ளது.
முறையே ராஜஸ்தானில், எஸ் 1 மாடலின் விலை ரூ.89,968 ஆகவும், எஸ் 1 ப்ரோ ரூ.119,138 எனவும், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசாவில், எஸ் 1 மாடல் விலை ரூ.94,999 ஆகவும், எஸ் 1 ப்ரோ விலை ரூ.1,24,999 ஆகவும் உள்ளது. பிற மாநிலங்களில் எஸ் 1 விலை ரூ. 99,999 எனவும், எஸ் 1 ப்ரோவின் ரூ.1,29,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வங்கிக் கடன்கள் ஏதும் உண்டா?
நிறுவனத்தின் பிரத்யேக ஓலா நிதி சேவைகள் மூலம் பல நிதி விருப்ப தேர்வுகளை வாடிக்கையாளர்கள் தங்களின் வசதிக்கேற்ப தெரிவு செய்துகொள்ளலாம். மேலும், ஐ.டி.எஃப்.சி. ஃபர்ஸ்ட் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, டாடா பைனான்ஸ் ஆகிய நிதி நிறுவனங்களும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு கடனுதவி வழங்குகிறது.
ஆதார் எண், பான் கார்டு, முகவரிச் சான்று கொண்டு எந்தத் தடையும் இன்றி உடனடி கடன் வசதிகளை இந்த நிதி நிறுவனங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் பெற முடியும் என ஓலா தெரிவித்துள்ளது.
கடனுதவி தேவைப்படாத வாடிக்கையாளர்கள் ரூ.499 பதிவுக் கட்டணம் தவிர்த்து, எஸ் 1 மாடலுக்கு 20,000 ரூபாயும், எஸ் 1 ப்ரோ மாடலுக்கு 25,000 ரூபாயும் முன்பணமாகச் செலுத்தி, ஸ்கூட்டர் பதிவை உறுதி செய்துகொள்ளலாம்.
வாடிக்கையாளர்கள் தங்களின் பதிவை ரத்துசெய்ய விரும்பினால், பதிவுக் கட்டணமும், முன்பணமும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என நிறுவனம் உறுதியளித்துள்ளது.
காப்பீடு
ஓலா தனது செயலியின் மூலம் ஓலா ஸ்கூட்டர்களின் காப்பீட்டுக்கான பல விருப்பத் தேர்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. ஓலாவுடன் இணைந்து, நாட்டின் மிகப்பெரிய தனியார் காப்பீட்டு நிறுவனமான ஐசிஐசிஐ லோம்பார்ட், விரிவான வாகன காப்பீட்டுத் திட்டங்களை வழங்குகிறது.
இருப்பினும், '1 வருட சொந்த சேதம், 5 வருட மூன்றாம் தரப்பு சேதம்' என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாங்குபவர்கள் தனிப்பட்ட விபத்து காப்பீடு, தேய்மானம், சாலையோர உதவி போன்ற பிற விருப்பங்களையும் தங்கள் காப்பீட்டுடன் வாடிக்கையாளர்கள் இணைத்துக்கொள்ள முடியும்.
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டெஸ்ட் ரைடு
அக்டோபர் மாதம் முதல் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்ட் ரைடு செய்யலாம். மேலும் ஸ்கூட்டரின் செயல்திறனில் வாடிக்கையாளர் திருப்தி அடையவில்லை என்றால் வாகனம் அனுப்பப்படுவதற்கு முன்பே, அவர்கள் மேற்கொண்ட முன்பதிவை ரத்து செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
வீட்டு வாசலில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
பதிவுசெய்தவர்கள் அனைவருக்கும், அவரவர் வீடுகளிலேயே ஸ்கூட்டர் டெலிவரி செய்யப்படவுள்ளது. பதிவுக் கட்டணத்தை வாடிக்கையாளர்கள் செலுத்தத் தவறினால், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஸ்கூட்டர், வேறு ஒருவருக்கு டெலிவரி செய்யப்படும் என்றும் நிறுவன தரப்பில் கூறப்பட்டுள்ளது.
விற்பனைக்கு பின் சேவைகள்
ஒவ்வொரு ஸ்கூட்டரிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாகனத்தின் செயல்பாடுகளைக் கணித்து வாடிக்கையாளர்களுக்கு சர்வீஸ் குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்படும். முறையே, சர்வீஸ் செய்ய வேண்டும் என வாடிக்கையாளர்கள் விருப்பம் தெரிவித்தால், வீடுகளுக்கே வந்து ஸ்கூட்டர் சர்வீஸ் செய்து தரப்படும்.