சிறிய அளவிலான முதலீட்டுடன் நடத்தப்படும் நிறுவனங்கள், சிறு நிறுவனங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஆனால், உண்மையில் அவை நாட்டில் 12 கோடி வேலைவாய்ப்புகளை வழங்கும் சக்தி பெற்றவை. நாட்டின் பொருளாதார வீழ்ச்சி சிறு நிறுவனங்களை ஏற்கனவே முடக்கிவிட்டது. கரோனா வைரஸ் அந்த முடக்கத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
பொதுமுடக்கம் காரணமாக வணிக பரிவர்த்தனைகள் குறைந்ததால் பாதிக்கப்பட்ட சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், மத்திய அரசின் தற்சார்பு பொருளாதாரத்திற்கான நிதி அளிப்பு திட்டத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டிருந்தன.
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் அளிப்பதற்காக 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும், இதன் மூலம், 45 லட்சம் நிறுவனங்கள் பலன்பெறும் என்றும் 3 மாதங்களுக்கு முன்பு அரசு அறிவித்தது. ஆனால், இந்த அறிவிப்புகளால் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தலைவிதி மாறாது.
ஏனெனில், சிறு நிறுவனங்களின் அவல நிலை எத்தகையது என்பதை ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்கள் தெளிவாக தெரிவிக்கின்றன. சிறு நிறுவனங்களுக்கு கடன் கிடைப்பதில் உள்ள நெருக்கடி தொடரும் என்று கடந்த ஆண்டே ரிசர்வ் வங்கி தெரிவித்துவிட்டது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டு பொதுமுடக்கம் காரணமாக வங்கிகளின் கடன் விநியோகம் 17 சதவீதம் சரிந்திருக்கிறது.
நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவதற்குப் போதுமான அளவு நிதி இல்லாதது, பழைய கடன்கள் மீதான வட்டி அதிகரித்திருப்பது, திறமையான தொழிலாளர்களின் பற்றாக்குறை, மூலப் பொருட்களுக்கான பற்றாக்குறை ஆகியவை சிறு நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
தற்போதைய நெருக்கடியை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, 10 ஆண்டுகளுக்கு பெயரளவிலான குறைந்தபட்ச வட்டி, எப்போது வேண்டுமானாலும் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான வசதி, தாராளமான கடன் என்னும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்க வேண்டும். அவ்வாறு அறிவித்திருந்தால், பெரும்பாலான நிறுவனங்கள் தற்போது மீண்டிருக்கும்.
ஆனால், சிறு நிறுவனங்களுக்கான வட்டி விகிதத்தை 9-14 ஆக வங்கிகள் மாற்றி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடன் வழங்கலில் ஏற்பட்டுள்ள சரிவுக்கான காரணத்தை கண்டறிய ரிசர்வ் வங்கி முயன்று வருகிறது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிய அளவில் கைகொடுக்கக் கூடியவை என்பதால், சிறு நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்க வேண்டிய நேரம் இது. ஆனால், அதிக வட்டியை விதிப்பது, கடனை திருப்பிச் செலுத்துவதில் கடுமையான போக்கை கொண்டிருப்பது போன்றவை, அரசு அறிவித்துள்ள நிதி அளிப்பு திட்டத்தின் நேர்மை மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
முடிந்த அளவு உதவி:
நாடு முழுவதும் உள்ள 6.3 லட்சம் சிறு நிறுவனங்களில் பெரும்பாலானவற்றிற்கு சரியான உதவி கிடைக்காததால் அவை தங்களின் இருத்தலுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றன.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை அடுத்து, இந்திய தொழில்துறை கூட்டமைப்பு அரசுக்கு ஒரு பரிந்துரையை அளித்தது. அனைத்து வகையான கட்டுப்பாடுகளையும் அரசு 3 ஆண்டுகளுக்கு தளர்த்த வேண்டும் என்று அது கேட்டுக்கொண்டது. ஆனால், அந்த பரிந்துரை கண்டுகொள்ளப்படவில்லை. நாடாளுமன்றக் குழுவைச் சந்தித்த சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இதையேதான் வலியுறுத்தினார்கள்.
சிறு நிறுவனங்களின் உண்மையான நிலை குறித்து செப்டம்பர் மாதத்திற்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று அனைத்து அமைச்சகங்களுக்கும் அரசு உத்தரவிட்டிருக்கிறது.
போர்க்கால அடிப்படையில் சிறு நிறுவனங்களுக்கு அரசு, அமைப்பு ரீதியாக உதவ வேண்டியது மிகவும் அவசியம்.
சிறு நிறுவனங்கள் கேட்கும் கடனை உடனடியாக வழங்கும் நோக்கில் ஆயிரம் கிராமப்புற வர்த்தக வங்கிகளுக்கு சீனா நிதியை ஒதுக்கி இருக்கிறது. இதேபோல் ஜெர்மனியும் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மிகப்பெரிய முன்னுரிமையை அளித்திருக்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம், சிறு நிறுவனங்களின் உற்பத்தியை பெருக்குவதில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஜப்பான் ஆகியவை மிகப்பெரிய முன்னேற்றத்தைப் பெற்றிருக்கின்றன.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறு நிறுவனங்களின் பங்களிப்பை அடுத்த 7 ஆண்டுகளுக்குள் 29 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்று கரோனாவுக்கு முன் அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், அதிக வட்டி விகிதம், கடன் பெறுவதில் உள்ள சிக்கல், கடனை திருப்பிச் செலுத்துவதில் காட்டப்படும் கடுமை ஆகியவை சிறு நிறுவனங்களை மீள முடியாத நெருக்கடியில் தள்ளி இருக்கின்றன.
இந்த தடைக்கற்கள் அகற்றப்பட்டால் மட்டுமே, கோடிக்கணக்கானவர்களுக்கு வாழ்வளித்து வரும் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முடியும்.
இதையும் படிங்க: ஊடகத்தை வைத்து திசை திருப்புவதால் பொருளாதார சீரழிவை மறைத்துவிட முடியாது - ராகுல் காந்தி