நம் முன்னோர்கள் பாரம்பரியமாக உணவில் சேர்த்துக்கொள்வதில் வாழைப்பழம் முக்கிய பங்குவகிக்கிறது. அக்காலத்தில் தினம் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். வாழைப்பழத்தில் மிகவும் மருத்துவப் பயன்கள் நிறைந்தது செவ்வாழைப்பழம். அவற்றைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
செவ்வாழை
இப்பழத்தில் பொட்டாசியம், பீட்டா கரோட்டீன், வைட்டமின் சி, ஆண்டி ஆக்ஸிடெண்ட், அதிகளவு நார்ச்சத்து உள்பட பல சத்துகள் நிறைந்துள்ளன. இப்பழத்தை நாம் தினமும் எடுத்துக்கொண்டால் நம் உடலில் உண்டாகும் பல நோய்களைத் தடுக்கிறது.
நமக்கு கண்கள் எவ்வளவு முக்கியம் என்று சொல்ல வேண்டியதில்லை. கண் பார்வை குறைபாடு ஏற்படும்போது, இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவது நல்லது. பல் வலி சம்பந்தமான பல பிரச்னைகள் உண்டாகும்போது இப்பழத்தை சாப்பிடலாம்.
செவ்வாழைப் பழத்தில் பொட்டாசியம் இருப்பதால், இதயத்திற்கு மிகவும் நல்லது. ரத்த உயர் அழுத்தத்தால், இதயத்திற்கு செல்லும் ரத்தத்தின் சீரான அளவு மாறுபடும். இந்தப் பிரச்சினையை சரிசெய்ய செவ்வாழைப்பழத்தை அடிக்கடி சாப்பிட வேண்டும்.
பெரும்பாலான மக்கள் கோடைகாலத்தில் மட்டும் பழங்களை அதிகம் சாப்பிடுகின்றனர். ஆனால், இப்பழத்தை எக்காலத்திலும் தொடர்ச்சியாக சாப்பிட்டுவரலாம்.
தினமும் செவ்வாழையை எடுத்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்
- கர்ப்பிணி பெண்கள் தினம் ஒரு செவ்வாழையை எடுத்துக்கொண்டால், அவர்களும், வயிற்றில் இருக்கும் குழந்தைகளுக்கும் பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது.
- இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் உஷ்ணம் குறையும்.
- ஆண்களுக்கு உண்டாகும் நரம்பு தளர்ச்சி குணமடையும். ஆண்மை குறைபாடு ஏற்படாது.
- தினமும் இரவு ஒரு பழம் சாப்பிட்டு வரும்போது செரிமான சக்தி அதிகரிக்கும்.
- மலச்சிக்கல் சரியாகி, மூல நோய் குணமாகும்.
- சிறுநீரகக் கோளாறு, கல்லீரல் வீக்கம் ஆகியவற்றைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.
பழம் சாப்பிடும் முறை
பழத்தை பெரும்பாலும் எல்லோரும் சாப்பாட்டிற்கு பின்பு சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அது தவறு. அப்படி சாப்பிடும்போது, பழத்தின் பயன் நமக்குக் கிடைப்பதில்லை. எனவே, பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மட்டுமே மேற்கண்ட அனைத்துப் பயன்களையும் நாம் அடையமுடியும். உடலுக்கு வலுசேர்க்கக் கூடிய இப்பழத்தை சாப்பிட்டு, ஆரோக்கியமாக உடலை வைத்துக்கொள்ளுங்கள்.