உலகம் முழுவதும் தற்போது தகவல் தொழில்நுட்பம் மூலம் இயக்கப்பட்டுவருகிறது. உலக மக்கள் மத்தியில் சமூக வலைதளங்கள் என்பது மிக முக்கிய அங்கமாக மாறியுள்ளது. உலகெங்கிலும் சமுக வலைதளங்கள் இல்லாமல் இயக்கமே இல்லை. அதேவேளை, அவ்வப்போது தொழில்நுட்பக் காரணங்களால் இச்சேவைகள் முடங்குகின்றன.
இந்நிலையில், தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக நேற்று (அக். 4) ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டன. மேலும் இந்தியா உள்பட பல நாடுகளில் வாட்ஸ்அப் சேவை முடங்கியுள்ள காரணத்தால் பயனர்கள் அவதிக்குள்ளாகினர்.
மீண்டும் செயல்படும் வலைதளங்கள்
இந்நிலையில் ஃபேஸ்புக், அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் பயனாளர்களால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த முடக்கம் ஏற்பட்டதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்தச் சூழலில் இன்று (அக்டோபர் 5) அதிகாலை முதல் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மீண்டும் செயல்படத் தொடங்கின.
மன்னிப்புக் கோரிய நிறுவனம்
இது குறித்து ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் மார்க் ஜுக்கர்பெர்க் தனது பேஸ்புக் பக்கத்தில், “ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், மெசஞ்சர் இப்போது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இன்று ஏற்பட்ட இடையூறுக்கு மன்னிக்கவும்.
நீங்கள் அக்கறை கொண்டவர்களுடன் தொடர்பில் இருக்க எங்கள் சேவைகளை நீங்கள் எவ்வளவு நம்பியிருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்” எனப் பதிவிட்டிருந்தார்.
பின்னர் இது தொடர்பாக நேற்று (அக்டோபர் 4) வாட்ஸ்அப் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த முடியாத நிலை உருவானதற்கு அனைவரிடமும் மன்னிப்புக் கோருகிறோம்.
நாங்கள் மெதுவாக, கவனமாக வாட்ஸ்அப்பை மீண்டும் இயக்கத் தொடங்கியுள்ளோம். பொறுமை காத்த உங்களுக்கு மிக்க நன்றி. எங்களிடம் மேலும் தகவல்கள் பகிரப்படும்போது நாங்கள் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே இருப்போம்” எனப் பதிவிட்டிருந்தது.
இதையும் படிங்க: பிஎஸ்என்எல் நிர்வாக இயக்குனருக்கு எதிராக தொழிற்சங்கம் போர்க்கொடி