பத்தனம்திட்டா: சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில், மண்டல பூஜைக்காக கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி (நவ.16) நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 41 நாள்கள் நடைபெறும் மண்டல பூஜையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் பக்தர்கள் கோவிட்-19 பாதுகாப்பு நடைமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று மாநில அரசும், கோயில் தேசம்போர்டும் அறிவுறுத்தியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிசம்பர் 26ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. அன்றைய தினம் ஐயப்பனுக்கு பூஜை, அபிஷேகங்கள் நடத்தப்பட்டு இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். அதன்பின்னர் டிசம்பர் 30ஆம் தேதி கோயில் நடை மீண்டும் திறக்கப்படும். ஜனவரி 14ஆம் தேதி மகர விளக்கு ஜோதி தரிசனம் நடைபெறும். அதன்பின்னர் கோயில் நடை ஜனவரி 20ஆம் தேதி சாத்தப்படும்.
சபரிமலை கோயில் பூஜை
சபரிமலை ஐயப்பன் கோயில் அதிகாலை 4 மணிக்கெல்லாம் திறக்கப்படும். அதன்பின்னர் பூஜைகள் காலை 7.30 மணிக்கு தொடங்கும். இதையடுத்து பகல் 12 மணிக்கு சபரிமலை ஐயப்பனுக்கு மிக முக்கிய நிகழ்வான நெய்யபிஷேகம் நடத்தப்படும். சுவாமிக்கு உச்ச பூஜைகள் நடத்தப்பட்டு நடை சாத்தப்படும். தொடர்ந்து மாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும்.
மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு தீபாதாரனை காட்டப்படும். மலர்களால் பூஜை நடத்தப்படும். இரவு 10 மணிக்கு நடைபெறும் பூஜையில் ஐயப்பனுக்கு, அப்பம், அரிசி, வெல்லம், பானகம் (நீர் ஆகாரம்) படைக்கப்படும். இந்த நீர் ஆகாரம், பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட வெல்லம், உலர் இஞ்சி, நீர் கொண்டு தயாரிக்கப்படும். இரவு 11 மணி பின்னர் ஹரிவராசனம் பாடம் ஒலிக்கப்பட்டு நடை சாத்தப்படும்.
கோவிட்-19 நேரத்தில் யாத்திரை: இந்த ஆண்டுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகள்
- கேரள அரசால் பம்பா, நிலக்கல் இடையே போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. பந்தளம், பத்தனம்திட்டா, செங்கனூர் பணிமனையிலிருந்து பயணிக்கும்.
- பம்பா சென்றடைய கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும் பம்பாவில் வாகனங்களை நிறுத்த அனுமதியில்லை. பம்பா, நிலக்கல் பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் பக்தர்கள் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
- பக்தர்கள், யாத்ரீகர்கள் நிலக்கல்லில் கோவிட்-19 சோதனை நடத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
- கோயில் வளாகத்திற்குள் நுழைந்த நேரத்திலிருந்து முந்தைய 24 மணி நேரத்திற்குள் வழங்கப்பட்ட ஒரு கோவிட் எதிர்மறை சான்றிதழ் அனைத்து பக்தர்களுக்கும் கட்டாயமாகும்.
- செல்லுபடியாகும் கோவிட்-19 எதிர்மறை சான்றிதழ் இல்லாத பக்தர்களுக்கு கோவிட்-19 க்கான ஆன்டிஜென் சோதனை செய்யப்படும்.
- நிலக்கல்லில் கோவிட்-19 சோதனை செய்பவர்கள், பாசிட்டிவ் என வந்தால் எந்தச் சூழ்நிலையிலும் மலையேற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- கோவிட்-19 விதிமுறைகள் அமலில் இருப்பதால், இந்தாண்டு பம்பா நதியில் பக்தர்கள் நீராட அனுமதியில்லை. ஆண்கள், பெண்கள் குளிக்க தனித்தனியே குளியலறை வசதி செய்யப்பட்டுள்ளது.
- பக்தர்கள் இரு முடிகட்ட பம்பாவில் உள்ள கணபதி கோயிலில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
- பம்பாவில் உள்ள கணபதி கோயிலில் தரிசன டோக்கன் சரிபார்க்கப்படும்.
- பக்தர்கள் வசதிக்காக இரும்பிலான தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்படும். இதற்கு கட்டணமாக ரூ.200 வசூலிக்கப்படும். பக்தர்கள் தரிசனம் முடித்து, இரும்பு வாட்டர் கேனை திருப்பி அளித்தால் ரூ.200 திருப்பி அளிக்கப்படும்.
- பதினெட்டாம் படிக்கு கீழே பக்தர்கள் தங்களின் கால்கள், கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- பதினெட்டாம் படிகளில் காவலர்கள் நிறுத்தப்படமாட்டார்கள்.
- சன்னிதானத்தில் உள்ள மேல்தளம் பயன்படுத்தப்படாது.
- இந்த ஆண்டு கோயிலில் ஷயன பிரதாஷிக்னத்துக்கு அனுமதியில்லை.
- நெய் தேங்காய் சிறப்பு கவுன்டர்கள் மூலம் வழங்கப்படும்.
- சுவாமி ஐயப்பனுக்கு நெய்யபிஷேகம் நடத்திய பின்னர் நெய் பிரசாதத்தை, மல்லிகாபுரம் தங்குமிடம் அருகிலுள்ள வடக்கு வாசலில் பெற்று கொள்ள வேண்டும்.
- பதினெட்டம் படிக்கு கீழே உள்ள தீமூட்டும் பகுதியில் (ஆழி) சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்ட்டுள்ளன. இதில், பக்தர்கள் அப்பம், அரவணை உள்ளிட்ட பிரசாதங்களை பெற்றுக் கொள்ளலாம்.
- தரிசனத்தை முடித்த பின்னர், சன்னிதானத்துக்கு பின்புறம் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- கோயில் தந்திரிகள் மற்றும் தலைமை குருவான மேல்சாந்தி உள்ளிட்டோரை சந்திக்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
சிறப்பு ஏற்பாடுகளுக்கு ஒரு நாள் செலவு
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒருநாள் செய்யப்படும் சிறப்பு ஏற்பாடுகளுக்கு நாளொன்றுக்கு ரூ.90 லட்சம் முதல் ரூ.1.25 கோடி வரை செலவாகிறது. அந்த வகையில் மொத்த செலவு ரூ.60 கோடியாக உள்ளது.
மண்டல மகர விளக்கு காலங்களில் வரவு
2017-18ஆம் ஆண்டுகளில் மகர விளக்கு பூஜை காலத்தில் ரூ.314.83 கோடி வருவாய் கிடைத்தது. இது 2018-19ஆம் ஆண்டுகளில் ரூ.227.53 கோடியும், 2019-2020ஆம் ஆண்டுகளில் ரூ.449.45 கோடியும் வருமானம் கிடைத்தது.
இதையும் படிங்க: கோவிட்-19 விதிமுறைகள் கடைப்பிடிப்பு; சபரிமலை மண்டல பூஜை தொடங்கியது!