உத்தரப்பிரதேச மாநிலம், புலந்த்ஷாரில் திங்கள்கிழமை (டிச. 7) இரவு திருமணம் ஒன்று நடந்துள்ளது. அதில் நடத்தப்பட்ட டி.ஜே.வில் சப்னா சவுத்ரி பாடலை, பிளே செய்யுமாறு சில இளைஞர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதற்கு டி.ஜே. மறுப்புத்தெரிவிக்கவே, அந்த இளைஞர்கள் டி.ஜே.வுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, டி.ஜே.க்கு ஆதரவாக இருந்தவர்களுக்கும், அந்த இளைஞர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கைகலப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கொட்வாலி காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்டமாக நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து புலந்த்ஷார் மூத்த காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார் சிங் கூறுகையில், 'மோதலின் போது இறந்தவர், கைகலப்பில் தலையிட முயன்றுள்ளார். அப்போது மாரடைப்பால் உயிரிழந்திருக்கக் கூடும்' என்றார்.
மேலும், இது குறித்து நேரில் பார்த்தவர் கூறுகையில், 'டி.ஜே.விடம் அந்த இளைஞர்கள் சப்னா சவுத்ரியின் பாடலைப் போடச் சொல்லி கேட்டனர். அதற்கு டி.ஜே. இல்லை என்று சொன்னதால், அந்த இளைஞர்கள் டி.ஜே.வையும், அவரது ஆதரவாளர்களையும் தாக்கினர். அப்போது அந்த இளைஞர்கள் ஒரு இளைஞரையும் பலமாகத் தாக்கினர். இதனால், அவர் தரையில் விழுந்து உயிரிழந்தார்' என்றார்.
இதையும் படிங்க...நட்சத்திர ஹோட்டலில் அஜய் வாண்டையாரை வெளுத்தெடுத்த கும்பல் - பரபரப்பு சிசிடிவி காட்சி !