சென்னை செங்குன்றம் பகுதியில் கொக்கைன் எனும் போதை பொருள் கடத்தப்படுவதாக ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், செங்குன்றம் அடுத்த காவாங்கரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவரிடம் நடத்திய சோதனையில், நான்கு கிலோ கொக்கைன் போதை பொருள் இருந்தது தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், போதை பொருளை இலங்கைக்கு கடத்த முயன்றது அம்பலமானது.
சர்வதேச சந்தையில் ஒரு கிலோ கொக்கைன் 4 முதல் 5 கோடி ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதையடுத்து, செங்குன்றத்தை சேர்ந்த சதீஷ், கணேஷ் ஆகிய இருபவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அதன் பிறகு, மாநில போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதனிடையே, இவர்களுக்கு கொக்கைன் போதை பொருளை கொடுத்தது யார்? என்பது குறித்த விசாரணையை மாநில போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.