திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனத்தின் பின்புறம் தூர்நாற்றம் வீசியதால் ஜனவரி 5ஆம் தேதி கால்நடைகள் மேய்ப்பவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது, இறந்த நிலையில் 21 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
இது பற்றி தகவலறிந்து சம்பவ இடம் சென்ற கள்ளிமந்தையம் காவல்துறையினர், உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஒட்டன்சத்திரம் துணை கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டதில், வேடசந்தூர் அருகே உள்ள தென்னம்பட்டி பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் என்பவரின் மகள் ஜெயஸ்ரீ என்று கண்டறியப்பட்டது.
இவர், வேடசந்தூர் பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வந்த நிலையில், ஜனவரி 1ஆம் தேதி மாலை பணிக்கு சென்ற ஜெயஸ்ரீ வீடு திரும்பவில்லை. அதன் பிறகு, வேலை செய்து வந்த நிறுவனம் மற்றும் உறவினர் வீடுகளில் ஜெயஸ்ரீயை அவரது குடும்பத்தினர் தேடி வந்தனர். ஆனால், எங்கு கிடைக்காததால் வடமதுரை காவல் நிலையத்தில் கடந்த 3ஆம் தேதி பெற்றோர் புகார் அளித்தனர்.
இதனிடையே, மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்திலும் இளம்பெண் காணாமல் போனதாக தகவல் உள்ளதா என்பது குறித்து கள்ளிமந்தையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், இது தொடர்பான புகார் வடமதுரை காவல் நிலையத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு ஜெயஸ்ரீயை அடையாளம் கண்ட காவல்துறையினர், அவரது செல்போனை ஆய்வு செய்ததில் குறிப்பிட்ட ஒரு எண்ணில் இருந்து ஒரே நாளில் 20க்கும் மேற்பட்ட முறை அழைப்பு வந்துள்ளது. அந்த எண்ணை ஆய்வு செய்ததில், ஜெயஸ்ரீ உடன் பணிபுரிந்து வந்த தங்கதுரை என்பது தெரியவந்தது.
இதன் அடிப்படையில், தங்கதுரையிடம் கள்ளிமந்தையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், தங்கதுரையும், ஜெயஸ்ரீயும் கடந்த ஆறு மாதமாக காதலித்து வந்ததும் திருமணம் செய்து கொள்ளுமாறு ஜெயஸ்ரீ வற்புறுத்தி வந்ததும் தெரியவந்தது. இதனால் இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்கு வாதம் ஏற்பட்ட நிலையில், இறுதியாக டிசம்பர் 31ஆம் தேதி இரவு தங்கதுரையை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜெயஸ்ரீ, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு நெருக்கடி கொடுத்தார்.
இதனிடையே, கள்ளிமந்தையம் அருகே உள்ள தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனத்தின் பின்புறம் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, ஆத்திரமடைந்த தங்கதுரை, தனது நண்பர் ஜெகநாதனின் உதவியுடன் ஜெயஸ்ரீயின் கழுத்தை நெரித்து கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது. இதைடுத்து, தங்கதுரை, ஜெகநாதன் ஆகிய இருவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஒட்டன்சத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.