வேலூர் மாவட்டத்தில் அரிசி கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துவருவதைத் தடுக்க, கடத்தல் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும்படி, அம்மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.
இதற்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலக புகார் எண், மாவட்ட வட்ட வழங்கல் அலுவலரின் எண், வட்ட வழங்கல் துறை அலுவலக எண் ஆகியவற்றை ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று (அக். 10) மாலையில், லாரியில் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் பானுவிற்கு (DSO) தொலைபேசி மூலம் தகவல் கிடைத்தது. இதனையடுத்து பானு தலைமையில் பறக்கும் படை வட்டாட்சியர் கோடீஸ்வரன், வட்ட வழங்கல் அலுவலர் தேவி (TSO), அவர்களது குழுவினர் குடியாத்தத்தில் உள்ள பிச்சனூர் கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கல்லேரி என்னும் குக்கிராமத்திலுள்ள மாந்தோப்பு அருகே, ஆந்திர பதிவெண் கொண்ட லாரி ஒன்று தார்ப்பாய் போர்த்தியபடி நின்றுகொண்டிருந்தது.
அதைச் சோதனை செய்தபோது கடத்துவதற்தகாக ரேசன் அரிசி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த லாரியிலிருந்து, சுமார் 15 டன் அரிசி பறிமுதல்செய்யப்பட்டது. அந்த அரிசி மூட்டைகள் பாக்கம் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்குச் சொந்தமான தானியக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
தனியாக நின்ற லாரியின் ஓட்டுநர் யார், லாரி எங்கிருந்து வந்தது என்பன குறித்து உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க : பெட்ரோல் பங்கில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற இளைஞர் கைது