தூத்துக்குடி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியநாயகிபுரம் பகுதியில் இயங்கிவரும் தனியார் பள்ளி ஒன்றில் புதுக்கோட்டை, அந்தோணியார்புரம், கோரம்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.
வழக்கம்போல், இன்று மாலை பள்ளி முடிந்ததும், பள்ளி வாகனம் மாணவ, மாணவிகளை வீட்டிற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தது. இதையடுத்து, பள்ளி வாகனம் தூத்துக்குடி - பாளையம்கோட்டை சாலையில் உள்ள அந்தோணியார்புரம் அருகே வந்தபோது, சாலையின் குறுக்கே திடீரென மாடு ஒன்று சென்றது.
அதனால், ஓட்டுநர் வாகனத்தை நிறுத்த முயன்றபோது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில், மாணவர்கள் அனைவரும் நல் வாய்ப்பாக உயிர் தப்பினர். இதில் ஓட்டுநர் உள்பட இரண்டு குழந்தைகள் லேசான காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மேலும், விபத்து குறித்து புதுக்கோட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தனியார் பள்ளிப்பேருந்து சக்கரத்தில் சிக்கி 4 வயது சிறுமி உயிரிழப்பு!