திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாடப்பள்ளி பகுதியில் வசிப்பவர் கூலித்தொழிலாளி ஜீவா (29). இவருடைய மனைவி நந்தினி (26). இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இருவருக்கும் திருமணமாகி ஒரு வருடம் ஆன நிலையில், நந்தினி கர்ப்பந்தரித்து பிரசவத்திற்காக நேற்று (நவ.15) காலை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நந்தினியை பரிசோதித்த மருத்துவர், சாதாரண முறையில் பிரசவம் பார்ப்பது கடினம், அறுவைச் சிகிச்சையின் மூலம் குழந்தையை எடுக்கலாம் என அவரது கணவர் ஜீவாவிடம் தெரிவித்துள்ளார். நந்தினி உடம்பில் ரத்தம் இல்லை, ஒரு யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. மருந்து மருத்துமனையில் இல்லை, வெளியிலிருந்து வாங்கி வரவேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் ஜீவாவிடம் தெரிவித்துள்ளனர்.
இதற்காக வெளியே சென்ற ஜீவா மருந்து வாங்கிக் கொண்டு வருவதற்குள் நந்தினியின் தாயார், அலறியடித்துக் கொண்டு வெளியே வந்தார். நந்தினிக்கு பேச்சு மூச்சு இல்லை, என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை எனக் கூறியுள்ளார். இதனைக் கேட்டு நந்தினியை காண சென்ற ஜீவா, கண்கள் சொருகி துடிப்புகள் குறைந்து காணப்பட்ட நந்தினியைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அதே சமயம் கர்ப்பிணியின் குடும்பத்தாரை வெளியே அனுப்பிவிட்டு நந்தினியை மருத்துவமனையின் பின்வாசல் வழியாக அவசர ஊர்தியில் ஏற்றி வேலூர் அடுக்கம்பாறைக்கு அனுப்பியுள்ளனர். இது குறித்து மருத்துவரிடம் விளக்கம் கேட்ட ஜீவா சரியான விளக்கம் தரவில்லை என தெரிகிறது. உடனடியாக அடுக்கம்பாறை சென்ற ஜீவாவிடம் உனது மனைவி இறந்து நான்கு மணி நேரமாகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் மனவேதனையடைந்த ஜீவா, திருப்பத்தூர் அரசு மருத்துவனைக்கு உறவினர்களுடன் சென்று தன் மனைவிக்கு என்ன நடந்தது எதற்காக இறந்துவிட்ட என் மனைவியை அடுக்கம்பாறைக்கு அனுப்பி வைத்தீர்கள் என பல கேள்விகளை கேட்டு முற்றுகையிட்டார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் நகர காவல் ஆய்வாளர் பேபி, திருப்பத்தூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேல் ஆகியோர் ஜீவாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன் பின்பு ஜீவா மற்றும் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளை காவு வாங்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள்!