சென்னை ஆலந்தூரைச் சேர்ந்தவர் நாகூர் மீரான்(65). இவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட துணைத் தலைவராக உள்ளார். இவரது மகனின் திருமணம் அடுத்த மாதம் நடைபெறவுள்ளதால், திருமண அழைப்பிதழ் வைக்க பூவிருந்தவல்லி அடுத்த கரையான்சாவடிக்கு இன்று மதியம் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அங்கு, கடையின் முன்பு தனது வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்ற அவர், பின் வெளியே வந்து பார்த்தபோது வாகனம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, அந்தக் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, நாகூர் மீரான் வாகனத்திலிருந்து சாவியை எடுக்காமல் கடைக்குள் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
அந்த வழியே மற்றொரு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த பெண் ஒருவர், அதனை கண்காணித்து தனது வாகனத்தை எடுப்பதுபோல பாவனை செய்து தோளில் கைப்பையை மாட்டிக் கொண்டும், ஹெல்மெட் அணிந்தும் அந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற காட்சி அதில் பதிவாகியுள்ளது.
இதையடுத்து, கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆதாரமாகக்கொண்டு பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட பெண் குறித்தும், இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் பூவிருந்தவல்லி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.