திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்தவர் மூர்த்தி. எலெக்ட்ரிசியனாக பணியாற்றி வந்த மூர்த்தி, சரியான வருவாய் இல்லாததால் வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்ய முடிவெடுத்து, சென்னை சூளைமேட்டை சேர்ந்த டோமினிக் ராஜ் என்பவரை சந்தித்துள்ளார்.
அா்மெனியா நாட்டில் நல்ல சம்பளத்தில் எலெக்ட்ரிசியன் வேலை உள்ளதாகவும், ஆனால் முதலில் 5 லட்ச ரூபாய் பணம் கட்ட வேண்டும் என்றும் மூர்த்தியிடம், டோமினிக் ராஜ் கூறியுள்ளார். மூா்த்தியும் 5 லட்ச ரூபாயை வட்டிக்கு கடன் வாங்கி டோமினிக்கிடம் 2018ஆம் ஆண்டு கொடுத்துள்ளார். அடுத்த சில வாரங்களில் போலி விசா தயாரித்து, மூர்த்தியை சென்னையில் இருந்து ரஷ்யா வழியாக அா்மெனியா நாட்டிற்கு டோமினிக் அனுப்பிவைத்துள்ளார்.
ஆனால், மூர்த்தி வந்தது போலி விசா என்பதைக் கண்டறிந்த அா்மெனிய விமான நிலைய அதிகாரிகள், அவரை வெளியேவிடாமல் மீண்டும் சென்னைக்கே திருப்பி அனுப்பினர். இதையடுத்து, ஏமாற்றத்துடன் சென்னை திரும்பிய மூா்த்தி, டோமினிக்கை தேடிக் கண்டுபிடித்து, பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். இரண்டு ஆண்டுகளாக இழுத்தடித்த பின்னர், பணத்தைத் தர முடியாது என்று கூறியதோடு, மூா்த்தியை மிரட்டியுமுள்ளார் டோமினிக். இதையடுத்து மூா்த்தி சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த விமான நிலைய காவல்துறையினர், இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த டோமினிக் ராஜை கைது செய்து, ஆலந்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.
இதையும் படிங்க: குடிபோதையில் தலைமைக் காவலரைத் தாக்கிய நபர் கைது!