திருச்சி தில்லைநகர் அண்ணாநகரைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவர் புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலாளராக உள்ளார். இவரது மகள் மலர்விழி மீரா (22). இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த மீராவின் உறவினரான முரளி(34) ஏற்கனவே திருமணமானவர். இந்நிலையில் முரளி, மீராவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதற்கு மீரா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்திருக்கிறார்.
இதையடுத்து நேற்று மாலை கல்லூரியிலிருந்து வீடு திரும்பிய மீராவை வழிமறித்த முரளி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக 10க்கும் மேற்பட்ட முறை சரமாரியாகக் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மீரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் தில்லைநகர் காவல்துறையினர் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து அறிந்த மீராவின் உறவினர்கள் முரளியைச் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த முரளி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருச்சி அரசு மருத்துவமனையில் இரு தரப்பு உறவினர்களும் குவிந்து இருப்பதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இதனால் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.