கோவை பி.கே. புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவர் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சீதாலட்சுமி மகப்பேறு மையத்தில் பணிபுரிந்துவந்தார். மருத்துவமனையில் பணிபுரிந்த சில நபர்கள் உள்நோக்கத்துடன் தன்னைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்பி வேலையைப் பறிக்க முயல்வதாக குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவித்துவந்துள்ளார்.
மேலும், அங்கு பணிபுரியும் செவிலி லதா, அலுவலக ஊழியர்கள் ரேவதி, சாலமன் ஆகியோர் தன்னைப் பற்றி தவறான தகவல்களை மருத்துவரிடம் சொல்லிவருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதனால் மன அழுத்தத்தில் இருந்த ரங்கசாமி தென்னை மரத்திற்கு வைக்கும் பூச்சிக்கொல்லி மாத்திரைகளைச் சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அவருக்கு மருத்துவம் அளிக்கப்பட்டுவந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி ரங்கசாமி உயிரிழந்தார்.
இறந்த தூய்மைப் பணியாளர் ரங்கசாமியின் உடல் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே தற்கொலைக்கு காரணமானவர்கள் என மூன்று பேரின் பெயரைச் சொல்லி கைப்பேசியில் காணொலி பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது அந்தக் காணொலி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தற்கொலை குறித்து கோவை மாநகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க...டிராவல்ஸ் உரிமையாளரின் மனைவிக்கு பாலியல் தொந்தரவு: குற்றவாளிக்கு சிறை!