எம்ஜிஆர் நகர் சூளைப்பள்ளம், சிவா விஷ்ணு கோயில் தெருவைச் சேர்ந்த 11 வயது சிறுமி, கேகே நகரில் உள்ள தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள ஜாகிர் உசேன் தெருவில் 67 வயது முதியவரான முருகன் என்பவர் வசித்துவருகிறார். தினந்தோறும் அச்சிறுமி பள்ளி முடிந்து முருகன் வீட்டு வழியாக நடந்து செல்வது வழக்கம்.
அதேபோல், நேற்று மாலை 4.30 மணிக்கு அவ்வழியே தனியாக வந்து கொண்டிருந்த மாணவியிடம் முதியவர் முருகன் அன்பாக பேச்சு கொடுத்துள்ளார். பின்னர், தனது வீட்டிற்குள் மாணவியை அழைத்து சென்ற முருகன் அவரிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அங்கிருந்து தப்பி வீட்டிற்கு ஓடி வந்துவிட்டார். நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் அழுதுகொண்டே தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, உடனடியாக மாணவியின் தாய் எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த எம்ஜிஆர் நகர் காவல் துறையினர் முதியவர் முருகனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட முருகன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்வி அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்பது தெரிய வந்தது. மேலும், முதியவர் முருகன் ஏற்கெனவே இரண்டு முறை மாணவியை வீட்டிற்கு அழைத்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: கோயம்புத்தூர் பாலியல் வழக்கு: நாடாளுமன்றத்தில் நீதிகேட்ட ஜோதிமணி!