சென்னை நெசப்பாக்கம் ஜெய் பாலாஜி நகரைச் சேர்ந்த கீர்த்திகாவிற்கு(20), கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மணி என்பவருடன் திருமணம் நடைபெற்று இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இதற்கிடையே முனியப்பன்(24) என்பவருடன் கீர்த்திகாவுக்கு பழக்கம் ஏற்பட்டு திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு முனியப்பனுடன் சிவகங்கையில் உள்ள தனது தோழி வீட்டிற்கு ஒரு குழந்தையுடன் கீர்த்திகா சென்றுள்ளார். மற்றொரு எட்டு மாத குழந்தை சூர்யா, தனது பாட்டியுடன் நெசப்பாக்கத்தில் இருந்துள்ளது.
பின்னர், கடந்த 1ஆம் தேதி குழந்தை சூர்யாவுக்கு மார்பு சளி உள்ளதால், மருத்துவமனையில் காண்பிப்பதற்காக குழந்தையை சிவகங்கைக்கு அழைத்து சென்றுள்ளார் கீர்த்திகா. இதனையடுத்து கடந்த 3ஆம் தேதியன்று திடீரென்று குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி சிவகங்கையில் உயிரிழந்துள்ளது.
இந்நிலையில் தனது பேர குழந்தை சூர்யாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பாட்டி வள்ளி எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், குழந்தையின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து முனியப்பன், கீர்த்திகாவிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க...நடிகை சித்ரா தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்