சென்னை: சென்னை கிழக்கு முகப்பேர் பகுதியை சேர்ந்த சின்னத்திரை நடிகை, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ”நான் 11 திரைப்படங்களிலும், பல தொலைக்காட்சி தொடர்களில் நடிகையாக நடித்துள்ளேன்.
நான் எனது தோழி மூலம் அறிமுகமான, கீழ்கட்டளையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரை காதலித்து வந்தேன். ராஜேஷ் நிகழ்ச்சிகளை எடுத்து நடத்தும் தொழில் செய்து வந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் ராஜேஷ் ஆசை வார்த்தை கூறி, விடுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு நாங்கள் தனிமையில் இருந்தோம். திருமண தேதி நெருங்க நெருங்க அதில் விருப்பம் இல்லாததுபோல் நடந்து கொண்டார். அது பற்றி ராஜேஷிடம் கேட்கும்போது என்னுடன் தனிமையில் இருக்கவே திருமண நாடகம் நடத்தியது தெரியவந்து அதிர்ச்சி அடைந்தேன்.
தொடர்ந்து தன்னுடன் எடுத்து வைத்திருந்த ஆபாச படங்களை வைத்து மிரட்டி சுமார் இரண்டரை இலட்சம் ரூபாய் அளவிற்கு பணத்தை வாங்கியுள்ளார். மேலும் ரூ. 10 லட்சம் கொடுத்தால் மட்டுமே திருமணம் செய்துகொள்வதாக கூறுகிறார்” என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், காவலர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரியவந்துள்ளது. அதேபோல், ராஜேஷ் குடியுருக்கும் பகுதியான மடிப்பாக்கம் மகளிர் காவல் நிலையத்திலும் புகாருக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து, தன்னை ஏமாற்றி பணம் பறித்த ராஜேஷ் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, சின்னத்திரை நடிகை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தையடுத்து, உயர் நீதிமன்றம் ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், ராஜேஷ் குமார் மீது பாலியல் வன்கொடுமை செய்தது, மோசடி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், ராஜேஷைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை!