கொட்டிவாக்கத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சஞ்சீவ் குமார். இவர் அடையாறில் பாலமுருகன் என்பவருடன் சேர்ந்து சொகுசு கார் விற்பனை நிலையம் நடத்திவருகிறார். 2016ஆம் ஆண்டு பாலவாக்கத்தில் புதிய விற்பனையகத்தை திறக்க இருவரும் திட்டமிட்ட நிலையில், இவர்களுடன் சபரிகிரிநாதன் என்பவரும் பங்குதாரராக சேர்ந்துள்ளார்.
இச்சூழலில் சபரிகிரிநாதன், பாலமுருகனிடம் 50 லட்சம் ரூபாயும், சஞ்சீவ் குமாரிடம் ஒரு கோடி ரூபாயும் கடனாக பெற்றதாகக் கூறப்படுகிறது. மேலும், கார் விற்பனை செய்த பணத்தை முறையாக வழங்காமலும் ஏமாற்றி வந்துள்ளார்.
இருவரும் கொடுத்த கடனை இருவரும் திரும்ப கேட்கவே பணத்தை கொடுக்காமலும், சரியான பதில் அளிக்காமலும் சபரிகிரிநாதன் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் அந்த சபரியிடமே கடையை விட்டுவிட்டு, அடையாறில் 2018ஆம் ஆண்டு, சஞ்சீவ் குமார், பாலமுருகன் ஆகிய இருவரும் தனியாக விற்பனையகத்தைத் தொடங்கியுள்ளனர்.
இதனையடுத்து, சில மாதங்களுக்கு முன்பு கொடுத்த கடனை திரும்பக் கேட்டு சஞ்சீவ்குமார் தொலைப்பேசியில் அழைத்தபோது, ‘உன் கடையில் வெடிகுண்டு வீசிவிடுவேன்’ என சபரிநாதன் மிரட்டியுள்ளார். பின்னர், பாலவாக்கத்திலுள்ள கடைக்கு சஞ்சீவ் குமாரையும், பால முருகனையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.
ஆனால், சஞ்சீவ் குமார் பேச்சுவார்த்தைக்குச் செல்லாமல் நீலாங்கரை காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்றுள்ளார். அவ்வேளையில் பாலமுருகனை அடியாட்களுடன் தாக்கிய சபரிகிரிநாதன், சஞ்சீவ் குமாரை கைப்பேசியில் அழைத்து, “என் மீது புகார் அளித்தால், உன் குடும்பத்தில் அத்தனை பேரையும் கொன்று விடுவேன்” என மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன சஞ்சீவ் குமார் புகாரளிக்காமல் திரும்பியுள்ளார்.
இப்படி சபரிகிரிநாதன், சஞ்சீவ்குமார், பாலமுருகன் ஆகியோர் இடையே பணப் பிரச்னை வளர்ந்து கொண்டு செல்லவே, திடீரென வசந்த் என்பவர் சஞ்சீவ் குமாரை கைப்பேசியில் அழைத்து ஆபாசமாக திட்டியதுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். அதேபோல பாலமுருகனையும் மிரட்டிய வசந்த், மீண்டும் சஞ்சீவ் குமாரை அழைத்து சபரிகிரிநாதனிடம் பணம் கேட்கக்கூடாது என மிரட்டியதுடன் அடையாறில் உள்ள கடையை, தனது அடியாட்கள் மூலமாக தாக்கப்போவதாகக் கூறியுள்ளார்.
இதனால் சஞ்சீவ் குமார் கடையின் பாதுகாவலருக்கு தகவல் தெரிவித்து, வெளியே யாரேனும் இருக்கிறார்களா? என்று பார்க்கச் சொல்லியிருக்கிறார். அப்போது சிற்றுண்டி உணவகத்தின் வெளியே நின்ற ஐந்து பேரில் ஒருவர் யாரேனும் வருகிறார்களா? என்று பார்த்துக்கொண்டிருக்க, மீதி நான்கு பேரும் வாயிற்கதவு வழியாக ஏறி குதித்து, ஷோரூம் உள்ளே புகுந்து விலைமதிப்புமிக்க கார்களின் கண்ணாடி உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இது அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகிவுள்ளது. இதனையடுத்து சஞ்சீவ் குமார் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பதிவுசெய்த சாஸ்திரிநகர் காவல் துறையினர் நித்யானந்தம், சூர்யா, மணிகண்டன், டேவிட், பிரேம் ஆகிய ஐந்து பேரை சம்பவம் தொடர்பாக கைது செய்துள்ளனர். மேலும் சபரிகிரி நாதன், ஈசிஆர் வசந்த் ஆகியோரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பெண்ணின் ஆபாச படங்களை முகநூலில் வெளியிட்டவர் கைது - காவல்துறை விசாரணை