ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டுக்குள் கனரக வாகனத்தில் பெருமளவு கஞ்சா கடத்தப்படுவதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவிற்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலர்கள் நேற்றிரவு திருவள்ளூர் மாவட்டம் காரனோடை சுங்கச்சாவடியில், தமிழ்நாடு ஆந்திர எல்லைப்பகுதிகள் வழியாகத் தமிழ்நாட்டிற்குள் நுழையும் வாகனங்களைச் சோதனை செய்தனர்.
அப்போது, அங்கு வந்த தார்ப்பாய் சுற்றப்பட்டிருந்த ஒரு லாரியின் மேல் பிரித்துப் பார்த்தபோது, நகல் தாள் (ஜெராக்ஸ் பேப்பர்) பண்டல்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. அவற்றைப் பிரித்து பார்த்தபோது, மொத்தம் 810 தாள் பண்டல்களில், 308 கிலோ கஞ்சாவைப் பதுக்கிவைத்திருந்தனர். அவற்றை ஆந்திராவிலிருந்து வாங்கி வந்து மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் சப்ளை செய்யவிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர், கஞ்சாவைக் கடத்திவந்த மதுரையைச் சேர்ந்த மருதுபாண்டி (42), ஆண்டி (30) ஆகிய இருவரையும் மத்திய போதைப்போருள் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்து, 308 கிலோ கஞ்சா, லாரி ஆகியவற்றையும் பறிமுதல்செய்தனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து கஞ்சாவை லாரியில் மதுரை நோக்கி கடத்திவந்ததாகக் கைதான இருவரும், காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மின்கம்பங்கள் வழியாக தரையில் பாய்ந்த மின்சாரம் - வனவிலங்குகள் உயிரிழப்பு