திருப்பூர் மாவட்டம் பல்லடம் சரகத்திற்குட்பட்ட மங்கலம் பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக மங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து காவல் ஆய்வாளர் நீளாதேவி தலைமையிலான காவல் துறையினர் வளையபாளையம் அருகே விடியற்காலையில் சோதனை மேற்கொண்டனர். வண்ணான் தோட்டம் என்னுமிடத்தில் சாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள வீட்டில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட 3.5 டன் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்களை பதுக்கிய குற்றத்திற்காக கோயம்புத்தூரைச் சேர்ந்த சஜிபிரசாத், திருப்பூரை சேர்ந்த முத்துகிருஷ்ணன், பல்லடம் வடுக பாளையத்தை சேர்ந்த வைகுண்ட ராமன், பல்லடத்தை சேர்ந்த அரவிந்த் ராஜ் ஆகிய நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
3.5 டன் மதிப்பிலான குட்கா, ஒரு ஆட்டோ, ஒரு கார் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்து கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: அமெரிக்க தேர்தல் நாளில் உச்சத்தைத் தொட்ட கரோனா!