ஈகுவடார்: தென் அமெரிக்க நாடுகளான ஈகுவடார் மற்றும் பெருவின் வடக்குப் பகுதியில் நேற்று (மார்ச்.19) இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஈகுவடாரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானதாக நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது.
ஈகுவடார் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கயாகுயின் தெற்குப் பகுதியில் 80 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பசிபிக் கடற்கரை பகுதியில் இந்த நில நடுக்கம் மையம் கொண்டு இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நில நடுக்கத்தில் 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல், மற்றொரு தென் அமெரிக்க நாடான பெருவில், வடக்கு மாகாணங்களிலும் இந்த நிலநடுக்கம் தீவிரமாக உணரப்பட்டதாக கூறப்படுகிறது. பல்வேறு இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்து சேதமாகின. கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஈகுவடாரில் உள்ள மச்சலா மற்றும் குயென்கா நகரங்களில் இந்த நிலநடுக்கம் காரணமாக அதிகளவில் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நகரங்களில் பல கட்டடங்கள் அப்படியே சரிந்து, சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது விழுந்து நொறுங்கின. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் கட்டடக் குவியல்களுக்குள் சிக்கிக் கிடக்கும் பொது மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகளில் இருந்து வெளியேறிய பொதுமக்கள் உயிரை காத்துக்கொள்ள சாலைகளில் ஓட்டம் பிடித்தனர். மேலும் வீடுகளை இழந்த மக்கள் அருகிலுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ள மக்களில் அஞ்சிய பலர் கட்டடங்களில் இருந்து வெளியேறி சாலைகளில் முகாமிட்டுள்ளனர்.
இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தின் தீவிரத்தன்மை குறைவாக இருப்பதாகவும் அதன் காரணமாகவே சுனாமி எச்சரிக்கைக்கான அவசியம் ஏற்படவில்லை என்றும் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
சேதம் குறித்த தகவல்களை பொதுமக்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மூலம் மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் போலியான தகவல்களை பரப்பவும், நம்பவும் வேண்டாம் என்று ஈக்வடார் அதிபர் கில்லர்மோ லாஸ்ஸோ தெரிவித்து உள்ளார்.
அண்மைக் காலமாக உலகின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்க சம்பவங்கள் பதிவாகி பொது மக்களை பீதிக்குள்ளாக்கி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட கோர நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கானோர் உயிர்ச் சேதம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் இருந்து வெளியேவர முடியாமல் இரு நாடுகளும் தவித்து வருகின்றன.
இதையும் படிங்க: தொடரும் விமான விபத்து: பயிற்சி விமான விபத்தில் பெண் விமானி உள்பட 2 பேர் பலி!