கொழும்பு : பொருளாதார நெருக்கடியால் எழுந்துள்ள, அரசியல் குழப்பத்துக்கு நடுவே இலங்கை நாடாளுமன்றம் இன்று (ஏப்.6) காலை கூடியது. இதில் பேசிய சபாநாயகர் மகிந்த யாப்ப, தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் ஒரு மாபெரும் நெருக்கடியின் தொடக்கம் தான் என எச்சரித்தார்.
மேலும், “இப்பிரச்சினையை தீர்ப்பதில் நாம் தோற்றால் அது நாடாளுமன்றத்தின் தோல்வியாகவே கருதப்படும்” எனவும் அவர் கூறினார். தொடர்ந்து, இலங்கை வரலாற்றின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியின் தொடக்கத்தில் இந்த விவாதம் நடத்தப்படுவதாக குறிப்பிட்ட அவர், இது மேலும் அதிகரிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளதாக குறிப்பிட்டார்.
தற்போது நிலவும் எரிபொருள், மின்சார தட்டுப்பாட்டைக் காட்டிலும் எதிர்காலத்தில் கடுமையான உணவு பற்றாக்குறை ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளதாக எச்சரித்த சபாநாயகர், இந்த வாரத்தில் அனைத்து கட்சியினரும் இணைந்து செயல்படுவதால் , அத்தகைய விளைவுகளை நடக்காமல் தடுக்கவோ அல்லது ஓரளவுக்கு கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக தான் நம்புவதாகவும் கூறினார்.
ஒருமித்த கருத்துடன் இந்த வாரத்துக்குள் ஒரு தீர்வை கண்டுவிடுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சபாநாயகர் மகிந்த யாப்ப அழைப்பு விடுத்தார்.
இதையும் படிங்க : மகிந்த ராஜபக்ச ராஜினாமா மறுப்பு- பரபரப்பு நிமிடங்கள்!