டெல் அவிவ் : இஸ்ரேலில் நடத்தப்பட்ட குண்டு வீச்சு தாக்குதலில் ஷா அர் ஹனகெவ் டவுன் மேயர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில், இஸ்ரேலில் போர் அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.
பாலஸ்தீனா - இஸ்ரேல் இடையிலான எல்லைப் பிரச்சினை நூற்றாண்டுகளை தாண்டி தொடர்ந்து நீடித்து வருகிறது. சர்ச்சைக்குரிய காஸா நகரை அடிப்படையாக கொண்டு இரு நாடுகளும் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டு வருகின்றன. இந்நிலையில், பாலஸ்தீனத்தை அடிப்படையாக கொண்ட ஹாமாஸ் பயங்கரவாதிகள் குழு இஸ்ரேலில் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தின.
ஏறத்தாழ 5 ஆயிரம் ராக்கெட் தாக்குதல் இஸ்ரேலின் சர்ச்சைக்குரிய காஸா உள்ளிட்ட பகுதியின் மீது நடத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கொடூர தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் 5 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏறத்தாழ மூன்றரை மணி நேரம் நடந்த இடைவிடாத தாக்குதலில் ஜெருசலேம், சர்ச்சைக்குரிய காஸா உள்ளிட்ட நகரங்கள் தீக்கிரையாகி காட்சி அளிக்கின்றன. மேலும் இந்த கோர தாக்குதலில் ஷா அர் ஹனகெவ் டவுன் மேயர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது. இந்த திடீர் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.
இஸ்ரேல் முழுவதும் அபாய ஒலிகள் ஒலிக்கப்பட்டு உள்ள நிலையில், அந்நாட்டு அரசு போர் நிலை சூழல் உருவாகி உள்ளதாக அறிவித்துள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புப் படையானது ஹமாஸ் தீவிரவாதிகள் நாட்டுக்குள் ஊடுருவி உள்ளதாக தெரிவித்து உள்ளது. மேலும் பாராகிளைடிங் மூலம் தீவிரவாதிகள் ஊடுருவிய காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்த திடீர் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ பாதுகாப்புத் துறையினருடன் அவசர அலோசனை மேற்கொண்டு உள்ளார். இரு நாட்டுக்கும் இடையே போர் நிலவும் சூழல் ஏற்பட்டு உள்ளதால் உலகளாவிய அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. மேலும் காசா பகுதியை ஒட்டிய இடங்களில் வசிக்கும் இஸ்ரேல் நாட்டு மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டாம் என்றும் அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ஏற்கெனவே உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக உலக நாடுகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் சூழலில் இஸ்ரேல் மீதான இந்தத் தாக்குதல் இஸ்ரேல் - பாலஸ்தீன போரை தூண்டுவது போல் உள்ளது.
இதையும் படிங்க : தினை மாவுப் பொருட்களின் விலை குறைகிறது.. 52வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு!