அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கிளவ்லேண்ட் தேசிய வனப்பகுதியில், கடந்த 6ஆம் தேதி பரவத் தொடங்கிய காட்டுத்தீயின் வேகம் இன்னும் குறைந்தபாடில்லை.
குறிப்பாக, காட்டுத்தீயால் வடக்கு கலிபோர்னியா மாகாணம் அதிகளவில் பாதிப்பு அடைந்துள்ளது. பாலோ, ஆல்டோ, நாபா போன்ற இடங்களில் பரவி வரும் காட்டுத்தீயால், கடந்த ஒரே வாரத்தில் மட்டும் 10 லட்சம் ஏக்கர் நிலப்பகுதியில் உள்ள மரங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன. அதேபோல், 700 வீடுகள் எரிந்து சேதமடைந்துள்ளன. தீயைக் கட்டுக்குள் கொண்டு வர 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் பேரிடர் தீர்மானம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, காட்டுத்தீயால் வீடு இழந்தோருக்கு வீடு, மன அழுத்தங்களுக்கு ஆளானோருக்கு கவுன்சிலிங் உள்ளிட்ட சமூக சேவைகளும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், சான்பிரான்சிஸ்கோ குடாப்பகுதியில் சிவப்புக்கோடு எச்சரிக்கையான அதி தீவிர காட்டுத்தீ எச்சரிக்கையை அமெரிக்க தேசிய வானிலை சேவை மையம் விடுத்துள்ளது. அதாவது, ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்து திங்கட்கிழமை நண்பகல் வரை, மகாக் காட்டுத்தீக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாள்களில் ஏற்பட்ட 11 ஆயிரம் மின்னல்களால் நூற்றுக்கணக்கான இடங்களில் தீப்பற்றி எரிந்து வருகிறது. இவை சுமார் 10 லட்சம் ஏக்கர் நிலப்பகுதிகளில், அதாவது 1,562 சதுர மைல்கள் அல்லது 4,096 சதுர கி.மீ., நிலப்பரப்பை எரித்துச் சாம்பலாக்கியுள்ளது.
இந்த காட்டுத்தீயில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். 13,700 தீயணைப்பு வீரர்களும், தேசிய காவல் படை மற்றும் அமெரிக்க ராணுவமும் காட்டுத்தீயின் உக்கிரத்தைத் தணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த காட்டுத்தீ சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில், முன்பு ஏற்பட்ட பழைய காட்டுத்தீ பாதிப்புகளை முறியடிக்கும் எனக் கூறப்படுகிறது.