நியூயார்க்: அமெரிக்காவில் உள்ள சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களின் ஒன்றான ஐபிஎம்(IBM) தற்போது ஆட்குறைப்பு செய்யும் பணியில் இறங்கியுள்ளது. இதில் சுமார் 3.900-க்கும் மேற்பட்டோரை பணியிலிருந்து நீக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. கரோனா காலகட்டத்தில், இது போன்று பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தற்போது உக்ரைன் ரஷ்யா போரின் காரணமாக அமெரிக்கப் பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் உலக அளவில் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா மற்றும் அயல் நாடுகளில் உள்ள பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அண்மையில் டிவிட்டர் நிறுவனத்தில், இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் பல ஊழியர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். இந்த ஆட்குறைப்பு பணி ஐ.டி ஊழியர்களுக்கு பெரும் சவாலாகவே உள்ளது. மேலும் அவர்களது தலையில் இடியை இயக்குவது போல் இந்த செயல் அமைந்துள்ளது.
அந்த வகையில் ஐபிஎம் நிறுவனத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 3,900-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்களது பணியை இழக்க உள்ளனர். அமெரிக்கா போன்ற நாடுகளில் பணி புரிய வேண்டும் என நினைக்கும் மக்களுக்கு, ஆட்குறைப்பு நடவடிக்கை பெரும் சிக்கலாக அமையும்.