ஹாங்காங்: உலகம் முழுவதும் உள்ள மக்கள் 2024ஆம் ஆண்டு புத்தாண்டு வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ஹாங்காங்கில் புத்தாண்டு பிறந்தது. ஹாங்காங் நகரத்தில் புகழ்பெற்ற ஸ்கைலைனுக்கு எதிராக பார்வயாளர்களைக் கவரும் வண்ணம் 12 நிமிடங்கள் மிகப்பெரிய அளவிலான இசையுடன் கூடிய வானவேடிக்கைகள் நடைபெற்றன.
புத்தாண்டை முன்னிட்டு, ஹாங்காங் மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின் முகப்பில் பெரிய அளவிலான கவுண்டன் கடிகாரம் அலங்கரிக்கப்பட்டு வண்ண விளக்குகளால் ஜொலித்தது. 2024 என்ற எண்கள் துறைமுக முகப்பு கட்டிடத்தை ஒளிரச் செய்தது. வானவேடிக்கைகள் மற்றும் பல்வேறு வகையான இசை நிகழ்ச்சிகள் மற்றும் பிரமாண்டமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இந்த வான வேடிக்கைகள் பார்வையாளர்களை நான்கு பருவ காலங்களுக்கு அழைத்துச் செல்லும் வகையில் அமைந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வானவேடிக்கையுடன் அமைந்த இசையானது பார்வையாளர்களைத் தூண்டி காட்சியை மேம்படுத்தும் விதமாக அமைந்ததாக கூறப்படுகிறது. புத்தாண்டு வருகையொட்டி, இரவு 11 மணி முதல் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை இசை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதன் மூலம் மக்கள் புத்தாண்டை சிறப்பாக வரவேற்றனர்.
இந்த வானவேடிக்கையானது, 2024ஆம் ஆண்டிற்கான காதல், மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் நான்கு பருவ காலங்கள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக அமையும் என ஹாங்காங் அரசு சார்பில் முன்னதாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புத்தாண்டை புது செயற்கைக்கோளுடன் தொடங்கும் இஸ்ரோ!