ஜகர்த்தா: இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்த்தாவில் உள்ள ஜகர்த்தா இஸ்லாமிய மையத்துக்குச் சொந்தமான பெரிய மசூதியை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது திடீரென மசூதியில் தீப்பிடித்தது.
மசூதி முழுவதும் தீ பரவி, கொளுந்துவிட்டு எரிந்தது. அதில் மசூதியின் ராட்சத குவிமாடம் இடிந்து விழுந்தது. விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயைக் கட்டுப்படுத்தினர்.
இந்த தீ விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குவிமாடம் இடிந்து விழுவதற்கு சில விநாடிகள் முன்பு தீ கொளுந்துவிட்டு எரிந்து, தீப்பிழம்புகள் வெளியாகும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இதேபோல் 20 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கடந்த 2002ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், இந்த மசூதியை புதுப்பிக்கும் பணிகள் நடந்தபோது தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: இஸ்ரேலின் தலைநகராக ஆக ஜெருசலேமை மாற்ற அங்கீகாரம் - ரத்து செய்ய ஆஸ்திரேலியா மறுப்பு