ஈரானில் ஹிஜாப் சட்டத்தால் பறிபோன இளம் உயிர் - ஹிஜாப்பை எரித்தும் கூந்தலை வெட்டியும் போராட்டம் - Mahsa Amini
ஈரானில் ஹிஜாப் சட்டத்தை பின்பற்றவில்லை எனக் கூறி கைது செய்யப்பட்ட பெண் உயிரிழந்த நிலையில், அரசிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண்கள் ஹிஜாப்பை எரித்தும் கூந்தலை வெட்டியும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் நாடுகளில் ஈரான் முதன்மையானது. இங்குள்ள 9 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்கள் முழு உடலையும் மறைக்கும் வண்ணமாக ஹிஜாப் அணிய வேண்டும் என்ற சட்டம் உள்ளது. மேலும் இவ்வாறு முறையாக அணியாதவர்களை கண்காணிக்க ‘காஷ்ட்-இ-எர்சாத்’ (Gasht-e Ershad) என்ற அறநெறி காவல்துறை தனியாக நியமிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 22 வயதான மஹ்ஸா அமினி (Mahsa Amini) என்ற பெண், ஈரான் தலைநகரான தெஹ்ரான் சென்றபோது முறையாக ஹிஜாப் அணியவில்லை எனக்கூறி, அவரை அறநெறி காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கோமா நிலையில் அமினி இருந்தார். தொடர்ந்து சிகிச்சை பலனின்றி அமினி உயிரிழந்தார்.
இச்சம்பவம் ஈரான் நாட்டில் உள்ள பெண்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது முதலே, இஸ்லாமிய பெண்கள் மற்றும் சில சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதனிடையே அமினியின் உயிரிழப்பு அரங்கேற, தெஹ்ரான் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் பெண்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சிக்கு எதிராக கோஷங்களை எழுப்புகின்றனர். மேலும் ஹிஜாப் உடையை எரித்தும் கூந்தலை வெட்டியும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக ஈரானிய பத்திரிகையாளர் மாஷிஹ் அலினேஜெத் ட்விட்டரில் பல்வேறு வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.
குறிப்பாக, “பாலின நிறவெறி ஆட்சியால் நாங்கள் மிகவும் சோர்வடைந்துவிட்டோம்” என பதிவிட்டுள்ளார். அதேபோல் பெண்கள் மேடையில் பாடுவதற்கு அனுமதியில்லை என்ற சட்டத்திற்கும் ஈரான் பெண்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: மூன்று வயது சிறுமியை ஹிஜாப் அணிய வற்புறுத்திய பள்ளி மீது பெற்றோர் புகார்