அங்காரா: துருக்கியின் தென்கிழக்கே சிரியா எல்லையை ஒட்டியுள்ள கராமன்மராஸ் நகரில் கடந்த திங்கள்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. இதைத் தொடர்ந்து துருக்கி மற்றும் சிரியாவின் பல்வேறு நகரங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கமும், நில அதிர்வும் ஏற்பட்டது.
இதனால் ஏராளமான வீடுகள் மற்றும் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், இருநாடுகளிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28,192 ஆக உயர்ந்துள்ளது. துருக்கியில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 24,617-ஆக அதிகரித்துள்ளது. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் 2,167 பேர் உட்பட, 3,575 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால், இருநாடுகளிலும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்தியர் சடலம் மீட்பு: இந்நிலையில் துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி காணாமல் போன இந்தியாவை சேர்ந்த விஜய் குமார், உயிரிழந்ததாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மலட்யா பகுதியில் உள்ள விடுதியின் கட்டட இடிபாடுகளில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வந்த விஜய் குமார், பணி நிமித்தமாக கடந்த மாதம் 22ம் தேதி துருக்கிக்கு புறப்பட்டு சென்றார். வரும் 20ம் தேதி அவர் நாடு திரும்ப இருந்த நிலையில், நிலநடுக்கத்தில் சிக்கி பலியாகியுள்ளார். அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்ப அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக தூதரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலி எண்ணிக்கை உயரக்கூடும்: ஐநாவின் பொது நிவாரண பிரிவு தலைவர் மார்ட்டின் கிரிஃப்பித் கூறுகையில், "மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தும் தேவை ஏற்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் பலி எண்ணிக்கையை கணக்கிடுவது சிரமமானது. உயிரிழந்தோர் எண்ணிக்கை இருமடங்கு அல்லது அதற்கு மேல் அதிகரிக்க வாய்ப்புள்ளது." என்றார்.
இதையும் படிங்க: திண்டுக்கல்லில் இருந்து மதுரை - சென்னை தேஜஸ் ரயிலை இயக்க கோரிக்கை