காபூல்(ஆப்கானிஸ்தான்): ஆப்கானிஸ்தானில் இன்று(ஜூன்22) 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 255 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை குறித்து தெளிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பாக்டிகா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 255 பேர் பலியாகியுள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசு நடத்தும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 250 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தாலிபான்களின் பேரிடர் மேலாண்மைத் தலைவர் முகமத் நாசின் ஹகானி கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் மற்றும் கோஸ்டி ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் நடந்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தலிபான் அரசாங்கத்தின் துணை செய்தித் தொடர்பாளர் பிலால் கரிமி அவரது ட்விட்டரில், ‘பாக்டிகா மாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான நாட்டு மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். டஜன் கணக்கான வீடுகளை அழிந்து போனதாக’ பதிவிட்டிருந்தார். மேலும் பேரழிவைத் தடுக்க அனைத்து உதவி நிறுவனங்களையும் உடனடியாக அந்தப் பகுதிக்கு குழுக்களை அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க:அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு - போலீஸ் உட்பட பலர் பலி என தகவல்