மத்திய கிழக்கு நாடான ஏமனின், ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்றது வருகிறது.
ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழக்கக் காரணமான இந்தப் போரில், ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா, அமெரிக்கா ஆகிய நாடுகளும், ஹவுத்திகளுக்கு ஈரானும் உதவிவருகிறது. இந்நிலையில், ஏமனின் அண்டை நாடான சவுதி அரேபியாவை ஒட்டியுள்ள அல்-ஹாஸிம் நகர் மீது தாக்குதல் நடத்திய ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அப்பகுதியைக் கடந்த வாரம் கைப்பற்றினர்.
இதனால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், நிலைமை குறித்து ஆய்வு மேற்கொள்ள ஏமனுக்கான சிறப்பு ஐநா தூதர் மார்டின் கிரிஃபித்ஸ் அல்-ஹாஸிம் நகருக்கு நேற்று பயணம் மேற்கொண்டிருந்தார். அரசு அலுவலர்களைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஏமன் தற்போது முக்கிய திருப்பத்தில் உள்ளது. ஒன்று அமைதிக்கு திரும்ப வேண்டும் அல்லது பயங்கர மோதலுக்கு இரையாக வேண்டும்.
போர் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த லட்சக்கணக்கான ஏமன் மக்களுக்கு மாரிப் மாகாணம் புகலிடமாகத் திகழ்ந்து வருகிறது. கடந்த வாரம் கூட, அல்-ஜாவ்ஃப் மாகாணத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் மாரிப்புக்கு இடம்பெயர்ந்தனர்.
மாரிப் என்ற புகலிடம் போர்க்களமாக மாறாமல் இருப்பதை அனைத்துத் தரப்பினரும் உறுதிசெய்ய வேண்டும். ராணுவ தாக்குதல் நடத்துவது, இடங்களைக் கைப்பற்றுவது ஆகிய செயல்கள் பயனில்லாது ஒன்று" என்றார்.
இதனிடையே, நேற்று ட்வீட் செய்திருந்த மார்ட்டின், "உடனடியாக, நிபந்தனையின்றி பேச்சுவார்த்தை மேற்கொண்டு போர் நிறுத்தத்தைக் கொண்டு வரவேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க : வாய்ப்பில்ல ராஜா... தலிபான்களுக்கு ஆப்கான் அதிபர் திட்டவட்டம்!