அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனம் ஒன்றில் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர் ஜமால் கசோகி. இவர் சவுதி அரேபியா அரசை தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், துருக்கி நாட்டில் உள்ள சவுதி அரேபியாவின் தூதரகத்தில் வைத்து 2018 அக்டோபர் 2ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மானை கடுமையாக விமர்சித்து இவர் பணியாற்றிய ஊடகத்தில் கட்டுரை வெளியிட்டதால்தான், இளவரசருக்கு நெருக்கமானவர்கள் இவரை கொன்றார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, சவுதி அரேபியா அரசைக் கண்டித்து சர்வதேச ஊடகங்கள் கருத்துகள் வெளியிட்டன. ஆனால், கசோகியின் படுகொலைக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என சவுதி அரேபியா அரசு மறுப்பு தெரிவித்தது.
இதையடுத்து, கசோகியின் பெண் நண்பர் தொடுத்த வழக்கின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட சவுதி நீதிமன்றம், கசோகியை அந்நாட்டு அரசின் அலுவலர்கள்தான் கொலை செய்துள்ளார்கள் என்பதை கண்டறிந்தது. இதையடுத்து, ஒரு தலைவராக இதற்கு நான் பொறுப்பேற்கிறேன் என இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்திருந்தார்.
மேலும், சல்மானின் முன்னாள் உயர்மட்ட ஆலோசகர் சவுத் அல் கஹதானி, சவுதி தலைமை தூதரக அலுவலர் முகமது அல் ஒதாபி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவந்தது. இந்நிலையில், இவர்கள் குற்றமற்றவர்கள் என நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கொலையில் ஈடுபட்டதாக ஐவருக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: எதிர்கால போர்களை நாடு வெல்லும் - பிபின் ராவத்