ஈரான் அரசுக்கு சொந்தமான 'சபிதி' என்ற எண்ணெய் கப்பல், சவுதி துறைமுக நகரமான ஜித்தா அருகே செங்கடலில் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் இந்த கப்பல் மீது இரண்டு ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதில் கப்பல் சேதமடைந்தது.
வளைகுடா நாடுகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக ஈரான் பாதுகாப்பு கவுன்சில் செயலர் அலி ஷம்கானி கூறுகையில், "சர்வதேச கடற்பகுதியின் பாதுகாப்பைச் சீர்குலைத்தால் உலக பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஈரான் எண்ணெய் கப்பல் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள அத்தனை தரப்பினருக்கும் தக்க பதிலடி கொடுப்போம். தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொள்ள சிறப்பு கமிட்டி ஒன்றை அமைத்துள்ளோம்" என்றார்.
முன்னதாக, செப்டம்பர் 14ஆம் தேதி சவுதி அரசுக்கு சொந்தமான எண்ணெய் ஆலை, எண்ணெய் வயல் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலுக்குப் பின்னணியில் ஈரான் இருப்பதாகச் சவுதி, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டியிருந்தன.
இந்தச்சூழலில் தான், ஈரான் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிங்க: சவுதி எண்ணெய் தாக்குதலில் ஈரானுக்குப் பங்குண்டு: சவுதி அரசு