சவுதி அரசுக்குச் சொந்தமான அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் எண்ணெய் ஆலை, எண்ணெய் வயல்கள் மீது கடந்த 14ஆம் தேதி (சனிக்கிழமை) ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
சவுதி எண்ணெய் ஏற்றுமதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இந்த தாக்குதலுக்கு ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
அதேவேளையில், இத்தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள அமெரிக்கா அந்நாட்டின் மீது ராணுவ தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்துள்ளது.
அமெரிக்காவின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள ஈரான், தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பதிலடி கொடுக்க தயங்கமாட்டோம் என எச்சரித்துள்ளது.
இந்நிலையில், சவுதி பாதுகாப்புப் படை செய்தித் தொடர்பாளர் துருக்கி-அல்-மல்கி நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "சவுதி எண்ணெய் ஆலை, வயல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் பங்கிருப்பது விசாரணையில் உறுதியாயுள்ளது.
இந்த தாக்குதலில் 18 ஆளில்லா விமானங்கள், ஏழு ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற ஆயுதங்களை ஈரானின் புரட்சிகர ராணுவப் படையினர் குடிமக்கள் கட்டமைப்புகளுக்கு எதிராகப் பயன்படுத்தி வருகின்றனர். குற்றவாளிகள் யார் என்பது கண்டறியப்பட்டவுடன் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
'துபாய், அபுதாபி மீது தாக்குதல் நடத்தப்படும்' ஹவுத்திக்கள்
சவுதி அறிவிப்பைதொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் செய்தித் தொடர்பாளர் யாஹிய சரியா (Yehia Sarea), "ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி உள்ளிட்ட இடங்களில் மீது தாக்குதல் நடத்தப்படும். இது எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம்" என்று எச்சரித்துள்ளார்.
இதனால் வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது.