உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தபாடில்லை. கரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அங்கீகாரம் பெற்ற தடுப்பூசிகள் அதிவேகமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், சிலருக்குத் தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்தன.
பலரும் நீதிமன்றங்களில் இழப்பீட்டுத் தொகை வழங்கவேண்டும் என வழக்குத் தொடர்ந்தனர். தடுப்பூசி இழப்பீட்டுத் தொகையை யார் வழங்குவார்கள் என்ற கேள்விக்குப் பதில் தெரியாமலேயே இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது இழப்பீட்டுத் தொகையை நாங்கள் வழங்குகிறோம் என உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது. இது, தடுப்பூசி பெறுநர்களிடையே இருந்த மிகப்பெரிய கவலையைத் தீர்த்துள்ளது.
இந்தப் புதிய திட்டமானது, 92 நாடுகளில் தடுப்பூசியால் தீவிர பக்கவிளைவுகளுக்கு ஆளான நபர்களுக்கு, முழுத்தொகையை வழங்கும் வகையில் வடிவமைத்துள்ளனர். பல மாதங்களால் விவாதிக்கப்பட்டு வந்த இந்த திட்டத்திற்கு, உலக சுகாதார அமைப்பு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
ஜூன் 30, 2022 வரை கோவாக்ஸ் திட்டம் மூலம் விநியோகிக்கப்படும் தடுப்பூசிகளால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்திற்காக, தடுப்பூசிகள் வழங்கும்போது டோஸூக்கு ஏற்றபடி கூடுதல் தொகை வசூலித்து நன்கொடை நிதியிலிருந்து AMCக்கு ஆரம்பத்தில் நிதியளிக்கப்படும்.
இழப்பீட்டுத் தொகைக்கு மார்ச் 31, 2021 முதல் www.covaxclaims.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்தத் திட்டத்திற்கான காப்பீட்டுத் தொகையை பெறுவதற்குக் காப்பீட்டு நிறுவனமான சப் உடன் இணைந்து செயல்படுவதாக உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நாளொன்றுக்கு 10 ஆயிரத்தைக் கடக்கும் தினசரி கரோனா பாதிப்பு