இத்தாலியில் நேபிள்ஸ் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையின் குளியலறைப் பகுதியில் நோயாளி ஒருவர் இறந்தது போல் கிடக்கும் காணொலி ஒன்று வெளியாகி அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஒரு வாரமாக அந்நாட்டு மக்களால் அதிகம் பகிரப்பட்டு, இந்தக் காணொலி வைரலாகியுள்ளது. மேலும் இந்தக் காணொலியில், நோயாளிகள் தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் நெருக்க நெருக்கமான படுக்கைகளில் உள்ளது, போதிய மருத்துவ வசதிகள் இன்றி தவிப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
ஏற்கனவே கரோனாவின் இரண்டாம் அலை சில நாடுகளை தாக்கத் தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாள்களாக இத்தாலியில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் கணிசமாக உயர்ந்தும், தீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்கைகளின் தேவை உயர்ந்தும் வருகிறது. இந்நிலையில், இந்தக் காணொலி வெளியாகி அந்நாட்டு மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இத்தாலியில் ஏற்கனவே பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில், நேற்று (நவ.12) மட்டும் புதிதாக 37,798 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 636 பேர் அந்நாட்டில் உயிரிழந்த நிலையில், இதுவரை நாடு முழுவதும் மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 43,589ஆக உயர்ந்துள்ளது.